மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: வாழத் தகுதியற்ற சென்னை: மான்களுக்கு மட்டுமா மனிதர்களுக்குமா?

சிறப்புக் கட்டுரை: வாழத் தகுதியற்ற சென்னை: மான்களுக்கு மட்டுமா மனிதர்களுக்குமா?

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

மூச்சுக்காற்றைச் சுவாசிக்க 15 நிமிடத்துக்கு ரூ.299 முதல் ரூ.499 வரை Oxy Pure என்ற பெயரில் டெல்லியில் கடையைத் திறந்து விட்டார்கள். ”குடிதண்ணிக்குக் காசா?” எனக்கொதித்த மக்கள், நல்ல நீர் என்றாலே விலைகொடுத்தால்தானே கிடைக்கும் என்ற நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொண்டதுபோல, மூச்சுக்காற்றுக் கடையைச் சென்னைக்கும் வரவேற்கலாம்.

குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் போல, காற்று சுத்திகரிப்பு கருவிகள் வீடுகளை அலங்கரிக்கலாம். சென்னை ஐஐடியில்கூட காற்று சுத்திகரிப்பு கருவி கண்டுபிடித்துள்ளார்கள். அதிக மாசுள்ள இந்திய நகரங்களில் சென்னையும் இடம்பெற்றுள்ளதால், N95 மாஸ்க் பற்றி சென்னைவாசிகள் இப்போதே விசாரிக்கின்றனர்.

வெள்ளம், குடிநீர் தட்டுப்பாடு, வெப்ப அலை, கடற்சீற்றம், கடலரிப்பு, அதிக குளிர், சுனாமி, புயல் என இயற்கையின் அத்தனை பருவநிலை மாற்றங்களையும் எதிர்கொள்ளும் சென்னை மக்களின் மற்றுமொரு பிரச்சினை காற்று மாசு. 2019 நவம்பர் முதல் வாரத்தில் தனியார் வானிலை கண்காணிப்பாளர்களும், சமூக ஊடகங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பேசித்தீர்த்த பின்பு, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறையும் அவசரமாகக் கூடி, வதந்திகளையும் கதைகளையும் நம்ப வேண்டாம், காற்று மாசு குறித்து பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று தெரிவித்தனர். அதுமட்டுமல்ல, உண்மையிலேயே காற்று மாசு இருக்கிறதா, எப்படி வந்தது, எப்படிப் போனது, தடுப்பு நடவடிக்கையாக என்ன செய்யலாம் எனக் கண்டறிய ஆய்வுக்குழுவையும் அமைத்துள்ளனர்.

டெல்லியிலிருந்து சென்னைக்கு வங்கக்கடல் ஓரமாகப் பயணித்து வந்ததா அல்லது உத்தரப்பிரதேசத்து அமைச்சர் சொன்னது போல பாகிஸ்தான், சீனா நாடுகளின் சதியால் நச்சு வாயுக்கள் இந்தியாவிற்குள் புகுந்ததா? வடமாநிலங்கள் போல சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிக்காமல் விட்டதால் மாசு பரவியதா? இயல்பாகவே தொழிற்சாலைகள், வாகனங்கள், கட்டட வேலைகள், சாலைப்பணிகள், குப்பைகள் எரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டதா? அரசு சொல்வது போல, வானிலை மாற்றங்கள்தான் காரணமா? அப்படியென்றால் இதை எதிர்கொள்வது, தடுப்பது எப்படி என்றெல்லாம் அந்த சிறப்புக் குழுதான் கண்டறிவார்கள்.

வானிலை மாற்றத்தால் தேங்கிய மாசு

தலைவலி வந்தால் உடலெங்கும் பாதிப்பது போல, தலைநகர் சென்னைக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அது உள்ளபடியே கூடுதல் கவனம் பெற்றுவிடும். தரையிலும், 500 மீட்டருக்கு மேலுள்ள வான் பகுதியிலும் சமவெப்பநிலையோடு, ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது, வடகிழக்கு திசையிலிருந்து தரைப்பகுதி நோக்கி வீசும் காற்றினால், தூசுகள் மேலெழுந்து காற்றோடு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிடும். தட்பவெப்ப மாற்றம் காரணமாக தூசு அப்படியே தரைப்பகுதியில் தங்கிவிட்டது. அதுதான் காற்று மாசுக்குக் காரணம் என்று வானிலை விளக்கம் கொடுத்துவிட்டனர். சென்னையில் காற்று மாசு இருக்கிறது. பருவநிலை மாற்றத்தால், அந்த மாசு வெளியேற முடியவில்லை என்பதை நாம் அறிய முடிகிறது.

காற்றுமாசு சட்டங்களும் விதிகளும்

எந்தப் பிரச்சினை வந்தாலும் முதல் தீர்வாக வைப்பது, சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்பதுதான். காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் (1981), தமிழ்நாடு காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு விதிகள் (1983), சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (1986), அனல்மின் நிலையங்களின் பறக்கும் சாம்பல் பயன்படுத்துதல் அறிவிக்கை (1999), கட்டுமானம் மற்றும் இடிமான கழிவு மேலாண்மை விதிகள் (2016) உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நம் நாட்டில் இருக்கின்றன.

தொழிற்சாலைகளை, மாசுபாட்டின் தன்மையைப் பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என நான்காக வகைப்படுத்தி, அரசே கண்காணிப்பும் செய்கிறார்கள். அதிக மாசு வெளியேற்றப்பட்டால் அந்த நிறுவனத்தை இழுத்து மூடி சீல் வைக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தது மாசுக்கட்டுப்பாடு வாரியம். அப்படியென்றால் சட்டங்களும் விதிகளும் கடுமையாகத்தான் இருக்கிறது.

காற்றுமாசு கண்காணிப்பு

கத்திவாக்கம், மணலி, திருவொற்றியூர் ஆகிய தொழிற்சாலைப் பகுதிகளிலும், கீழ்ப்பாக்கம், தியாகராயநகர், நுங்கம்பாக்கம் ஆகிய வியாபாரம் மற்றும் வாகனப் புழக்கம் நிறைந்த பகுதிகளிலும், அண்ணாநகர், அடையாறு ஆகிய குடியிருப்புப் பகுதிகளிலும் தேசிய காற்று மண்டலக் கண்காணிப்புத் திட்டத்தின் (National Air Quality Monitoring Programme - NAMP) கீழ் காற்றின் தரம் (National Ambient Air Quality Standard - NAAQS) கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுவாசிக்கும்போது மூச்சுக்காற்றில் உட்செல்லக்கூடிய 10 மைக்ரானுக்கும் குறைவான (PM10) நுண்துகள் (Respirable Suspended Particulate Matter –RSPM) 60 மைக்ரோகிராம்/கனமீட்டர் (µg/m3) என்ற அளவில் உள்ளதா, சல்பர் டை ஆக்சைடு 50µg/m3, நைட்ரஜன் டை ஆக்சைடு 40µg/m3 என்றளவில் உள்ளதா என வாரமிருமுறை 24 மணி நேரமும் அளவீடு செய்கிறது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் (TNPCB).

தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்களும் (Continuous Ambient Air Quality Monitoring Stations - CAAQM), நடமாடும் கண்காணிப்பு வசதியும் உள்ளது. மணலி, ஆலந்தூர், வேளச்சேரி பகுதியில் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் (CPCB) தினசரி கண்காணிக்கிறார்கள்.

இந்நிலையங்கள் மூலம் 10 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள நுண் துகள்கள் (PM10), 2.5 மைக்ரானுக்கும் கீழுள்ள நுண்துகள்கள் (PM2.5), சல்பர் டை ஆக்சைடு (SO2), நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), அம்மோனியா (NH3), ஓசோன் (O3), கார்பன் மோனாக்சைடு (CO), பிடிஎக்ஸ் (BTX) உள்ளிட்ட வாயுக்களின் அளவு கண்காணிக்கப்படுகிறது.

அதாவது கண்காணிப்பு நடைமுறைகளும் நம்மிடம் உள்ளது. காற்றில் PM10 நுண்துகள்களின் அளவு 50க்கும் குறைவாக இருந்தால் தூய காற்று, 50 முதல் 100 வரை சுவாசிக்கத்தக்கது, 100 – 200 ஓரளவு மாசு, 200 – 300 மாசடைந்த காற்று, 300 – 400 மோசமான காற்று, 400 – 500 வரை அபாயகட்டம் என்று இந்திய அரசால் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சராசரி காற்று மாசு 150 ஆக உள்ளது. அதிகபட்சமாக 500யும் தாண்டியுள்ளது. 07.11.2019 அன்று மணலி – 334µg/m3, ஆலந்தூர் – 314µg/m3, வேளச்சேரி – 321µg/m3 என்றளவில் பதிவானதால் மாசும் தூசும் நம்மைப் பேச வைத்துவிட்டது. பனிமூட்டம் என்றால் குளிர் இருக்கும், இது புகை மூட்டமா என்று யோசிக்கும் முன்னரே, மூச்சுத்திணறல், சளி, இருமல், தலைவலி, காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் மக்களிடம் பரவியது. ஒருவாரம் தாண்டியும் நீடித்த காற்று மாசினால் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும், உடல்நலக்குறைவுள்ளோரும் பாதிப்புக்குள்ளாகினர்.

முதலிடத்தில் வாகனப்புகை

தூத்துக்குடி, கடலூர் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகளினால் அதிக காற்றுமாசுபாடு ஏற்பட்டாலும், சென்னையின் காற்றுமாசுக்கு 71.28% வாகனங்கள்தான் காரணம் என்கிறது சீர்மிகு நகர திட்ட அறிக்கை.

தனிநபர் பயன்பாட்டுக்காக (White Board) 52 லட்சம் வாகனங்களும், பொதுப்பயன்பாட்டுக்காக (Yellow Board) 3 லட்சம் வாகனங்களும் சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிற பகுதிகளில் பதிவு செய்து சென்னையில் இயங்கும் வாகனங்கள் தனி. ராமாவரம் சந்திப்பு 1.75 லட்சம், கோயம்பேடு சந்திப்பு 1.72 லட்சம், பள்ளிக்கரணை 1.56 லட்சம், டைடல் பார்க் 1.37 லட்சம், சேத்துப்பட்டு 1.31 லட்சம், வள்ளுவர் கோட்டம் 1.29 லட்சம், நந்தனம் 1.25 லட்சம், ரெட்டேரி 1.15 லட்சம் என 13க்கும் மேற்பட்ட சந்திப்புகளில் நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேலான வாகனங்கள் கடந்து செல்வதாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் 86 போக்குவரத்து சந்திப்புகளில் நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த வாகனம் என்றாலும் ஆறு மாதத்துக்கொருமுறை புகைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறது விதிமுறை.

தொழிற்சாலை மாசு

தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்சாலைகள் சென்னை மாநகரில் 88, அம்பத்தூர் 326, கும்மிடிபூண்டி 134, மறைமலை நகர் 316 என சென்னையில் மட்டும் 864 இருக்கின்றன. இந்த ஆலைகள் நிலத்தில் நிரப்பியது, மறுசுழற்சி செய்தது போக, சென்னை மாநகர் 83.25 டன், அம்பத்தூர் 6757.3 டன், கும்மிடிப்பூண்டி 44,032 டன், மறைமலை நகர் 8,363.18 டன் என்று 59,235.73 டன் கழிவுகளை ஆண்டொன்றுக்கு எரித்து சாம்பலாக்குகின்றன. சென்னையில் மட்டும் ஒரு ஆண்டுக்கு பத்து மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. அதாவது அரசின் ஒப்புதலோடு, விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவுக்குக் காற்று மாசுபாட்டில் தொழிற்சாலைகள் பங்கெடுக்கின்றன.

அனல்மின் நிலைய மாசு

கந்தகம், நைட்ரஜன், கரியமில வாயு, நைட்ரஜன் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரேன், ஓசோன் வாயு, பாதரசம், துத்தநாகம், காட்மியம், மோலிடென், ஆர்சனிக், நிக்கல், குரோமியம், மக்னீசியம், வனடியம், தகரம் (டின்) உள்ளிட்ட பல்வேறு நுண் துகள்கள் அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை எரிக்கும்போது வெளியாகின்றன.

சென்னை எண்ணூர் பகுதியில் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய மூன்று அனல் மின் நிலையங்கள், 500MW திறனில் மூன்று, 600MW திறனில் இரண்டு என எட்டு அனல்மின் நிலையங்கள் (3330MW) செயல்படுகின்றன. இது தவிர அங்கு ஐந்து புதிய அனல்மின் (3440MW) நிலையங்கள் அமைக்கின்ற திட்டமும் அரசிடம் உள்ளது.

எரியும் குப்பைகள்

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5500 டன் குப்பைகள் அகற்றப்படுகிறது. வடசென்னை கொடுங்கையூர் குப்பைமேடு 300 ஏக்கர் பரப்பிலும், தென்சென்னை பெருங்குடி குப்பைமேடு 200 ஏக்கர் பரப்பிலும், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அத்திப்பட்டு, சேக்காடு, மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், பல்லாவரம், சிட்லபாக்கம் உட்பட ஏக்கர் கணக்கிலுள்ள குப்பை மேடுகளும் அவ்வப்போது எரிகின்றன. சென்னையிலும், புறநகரிலும் குப்பை மேலாண்மை என்றாலே, சாலையோரம் குப்பைகளைக் கொட்டி எரிப்பதுதான். குப்பைகளை எரிக்கும்போது, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, ஹெக்சா குளோரா பென்சீன், ஃபியூரான், டையாக்சின், கரியமில துகள்கள் உள்ளிட்ட வாயுக்கள் வெளியாகின்றன.

இந்தச் சூழ்நிலையில் குப்பைகளை என்ன செய்வதென்று தெரியாமல் கொடுங்கையூரில் 32MW எரிஉலை, பெருங்குடியில் 26MW எரிஉலை அமைத்து நாள்தோறும் 5000 டன் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடுகிறார்கள். அதிலிருந்து வெளியேறும் வாயுக்களும் சென்னை காற்று மாசுக்கு பங்களிக்கும்.

கல்குவாரிகளும் துறைமுகங்களும்

சென்னையிலும் புறநகரிலும் திரிசூலம், ஐயர் மலை, ஆர்பர் மலை, பல்லாவரம், தாம்பரம் எருமையூர், மாங்காடு சிக்கராயபுரம், பம்மல் காமராஜபுரம், செங்கழுநீர் மலை, வண்டலூர் கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், கடப்பேரி, திருநீர்மலை, தலக்கனாஞ்சேரி உள்ளிட்ட கல்குவாரி, சரள் குவாரிகளில் இருந்து வெளியாகும் தூசுகள் சென்னையின் காற்று மாசில் கலந்துவிடுகின்றன.

சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி எல் அண்ட் டி, அதானி துறைமுகம் என சென்னையில் மட்டுமே மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன. நிலக்கரி, உலோக தாதுக்கள் இறக்குமதி, ஏற்றுமதி, கனரக வாகனங்கள் இயக்கம் என்று அத்தனை செயல்பாட்டிலும் வாயுக்கள் வெளியேறி காற்றோடு கலக்கின்றன.

சென்னை துறைமுகத்தால் காற்று மாசுபாடு ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி, நிலக்கரி, இரும்புத்தாது ஏற்றுமதி இறக்குமதிக்கு 01.10.2011 முதல் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது.

காற்று மாசு ஏற்படுகிறது என்று தடை செய்யப்பட்ட நிலக்கரி மற்றும் இரும்புத் தாதுக்களின் ஏற்றுமதி, இறக்குமதிப் பணிகளை எண்ணூர் காமராஜர் துறைமுகம் செய்து வருகிறது. இத்துறைமுகம் 25.04 மில்லியன் டன் நிலக்கரியைக் கடந்த ஆண்டு (2018-19) கையாண்டுள்ளது. அதாவது 2011 வரை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதிப்பை உண்டாக்கிய நிலக்கரி மாசு இப்போது எண்ணூர் பகுதிகளைப் பாதித்து வருகிறது.

கட்டுமானப் பணி

நாள்தோறும் 400 டன் கட்டுமானக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது. மணல், சிமென்ட், செங்கல், காங்கிரீட் கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு என ஏதோவொரு செயல்பாடு சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கிறது. 2015இல் தொடங்கிய கோயம்பேடு, பல்லாவரம், வேளச்சேரி மேம்பாலங்கள், 2016இல் தொடங்கப்பட்ட வண்டலூர், ஈச்சங்காடு, மேடவாக்கம், ரெட்டேரி மேம்பாலங்கள், சாலை விரிவாக்கப் பணிகள், புதிய சாலை அமைக்கும் பணிகளும், யானைக்கவுனி மேம்பால இடிப்பு பணிகளும் காற்று மாசை உண்டாக்குகின்றன.

காற்று மாசுபாட்டில் (Air pollution) டெல்லி முதலிடம் வகித்தால், தூசு மாசுபாட்டில் (Dust pollution) சென்னைக்கு முதலிடம். மெட்ரோ ரயில் பணிகள், குண்டும் குழியுமான சாலைகள், சாலையோர மணல் குவியல், Take Diversion சொல்லும் நெடுஞ்சாலைத் துறை பணிகள், மின்வாரிய கேபிள், தொலைபேசி கேபிள், பாதாளச் சாக்கடை, மழைநீர் வடிகால், சாலை விரிவாக்கம், நடைமேடை சீரமைப்பு, சீர்மிகு நகருக்கான பணிகள் எனத் தினந்தோறும் தோண்டுவதும், மூடுவதுமாக தூசு மாசு பரவிக்கொண்டே இருக்கிறது.

மக்கள்தொகைப் பெருக்கம்

தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகையில் சுமார் ஒரு கோடிப் பேர் சென்னையை நம்பி உள்ளனர். வீட்டில் உணவுத் தயாரிப்பு தொடங்கி, வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், குளிர் சாதனங்கள், மின்சாதனங்கள், இயந்திரங்கள் என தனிமனித பயன்பாட்டிலும் மாசு வெளியாகிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், மருத்துவமனை, அரசுத் துறை அலுவலகம், வர்த்தக வளாகம், தொழிற்பேட்டை, சிப்காட், ஐடி நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் என அனைத்தும் தலைநகரில் குவிந்திருக்கிறது. அத்துடன் சென்னை மாநகராட்சியில் 29 மரபுவழி சுடுகாடு/இடுகாடு மற்றும் நான்கு மின்சார சுடுகாடுகள் இருக்கின்றன. அத்தனைக்கும் காற்று மாசில் பங்கிருக்கிறது.

எல்லாம் சரிதான் அப்படியானால் நகரின் வளர்ச்சிக்காக எந்தத் திட்டத்தையும் செய்யக்கூடாதா என்ற பெருங்கேள்வி இக்கட்டுரையைப் படிக்கும் போது இயல்பாகவே உருவாகும்.

மாசு தடுப்பு நடவடிக்கைகள்

பெருநகர வளர்ச்சி குறித்துத் திட்டமிடும்போது மாசுக்கட்டுப்பாடு வாரியம் மட்டுமல்ல அனைத்து துறைகளும் மாசைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுத்து அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும். ஆனால், அதை தூசுமாசு போல நாம் காற்றில் பறக்கவிட்டு விடுகிறோம்.

கடந்த 2016ஆம் ஆண்டில் சென்னையைப் பாதித்த காற்று மாசைத் தொடர்ந்து, 30.08.2016 அன்று 2 கோடி ரூபாய் செலவில் கொருக்குப்பேட்டை அம்மா சுற்றுச்சூழல் பூங்காவையும், 02.03.2017 அன்று 7.16 கோடி ரூபாய் செலவில் பருத்திப்பட்டு ஏரி சுற்றுச்சூழல் பூங்காவையும் அமைக்க உத்தரவிட்டார்கள். 2015 சென்னை வெள்ளம், 2017 வர்தா புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் இழந்த மரங்களை மறுகட்டமைப்பு செய்திட பல கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டது. சீர்மிகு நகரம் என்ற பெயரில் சூழல் மறுசீரமைப்புப் பணிகள் அறிவிக்கப்பட்டது. இவை முழுமை பெற வேண்டும்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள் மக்களோடு மக்களாகப் பயணித்தால் போக்குவரத்து நெரிசல் தானாகவே குறைந்து விடும்.

பொதுப் போக்குவரத்தை லாபநோக்கமின்றி சேவை நோக்கில் செயல்படுத்தினால் தனிநபர் வாகனங்கள் குறையும்.

வாகனங்கள், தொழிற்சாலைகள், கல்குவாரி, கட்டுமானம், சாலைப்பணி, குப்பை மேலாண்மை அத்தனையிலும் விதிமீறல்கள் தடுக்கப்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தில் (National Clean Air Programme – NCAP) சென்னை நகரையும் இடம்பெறச்செய்து காற்று மாசு அளவைக் குறைத்திட வேண்டும்.

அனல் மின்சாரத்தைக் கைவிட்டு, சூரிய ஒளி மின்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

தொழில் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் பரவலாக்க வேண்டும்.

சென்னை பெருநகரில் இப்போதுள்ள 24 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பைக் காக்க வேண்டும். கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, நன்மங்கலம் வனம், பழவேற்காடு, பள்ளிக்கரணை, முட்டுக்காடு சதுப்பு நிலங்கள், திரிசூலம், திருநீர்மலை நகரி குன்றுகள், செம்மொழிப்பூங்கா, சேத்துப்பட்டு பூங்கா, மாதவரம் தோட்டக்கலைத் துறை பூங்கா, சாலையோர பூங்காக்கள் உள்ளிட்ட பசுமைப் பகுதிகளைச் சிறப்புக் கவனம் செலுத்தி பாதுகாத்திட வேண்டும். வீடுகள், அலுவலகங்களில் அதிகளவு செடிகளை வளர்த்திட வேண்டும்.

மூச்சுமுட்டும் எச்சரிக்கை

உலகில் பத்து மரணங்களில் ஒன்று காற்று மாசினால் ஏற்படுகிறது. இந்தியாவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாதிப் பேர் காற்று மாசினால் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல், இதயம், சிறுநீரகம், கர்ப்பப்பை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் காற்று மாசுதான் காரணம் என்றெல்லாம் State of Global Air -2019 ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

இந்தியாவில் மட்டும் 1.2 மில்லியன் மக்கள் காற்று மாசினால் மரணமடைவதாக Green Peace ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. காற்று மாசுபாட்டால் Chronic Obstructive Pulmonary Disease – COPD எனும் நுரையீரல் நோய் அதிகரிக்குமென மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். வாகனப் புகையால் இந்தியாவில் 3.5 லட்சம் குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாக Global Burden of Diseases, Injuries, and Risk Factors Study (GBD) 2017 புள்ளிவிவரங்களைப் பின்பற்றி The lancet planetary health ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

விலங்குகள் உயிர் வாழ ஏற்ற இடமில்லையென சென்னை கிண்டியிலுள்ள மான்களை திருநெல்வேலி களக்காடு வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்தது போல, காற்றுமாசு அதிகரித்தால் வாழத்தகுதியற்ற நகரில் மனிதர்களும் இடமாற்றம் ஆகலாம்.

அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் காற்று உள்ளது, காற்று மாசும் நிறைந்திருக்கிறது. மாசை மட்டுப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் நம் கைகளில்தான் உள்ளது. எதிர்காலத் தலைமுறையும் சுவாசிக்கட்டும்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon