மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: டார்கெட் பொதுச் செயலாளர் - எடப்பாடியின் ஏகன் பிளான்!

 டிஜிட்டல் திண்ணை:  டார்கெட் பொதுச் செயலாளர் - எடப்பாடியின் ஏகன் பிளான்!

மொபைல் டேட்டா ஆன் லைனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் என்று ஆன பிறகு அதிமுகவில் யார் யார் கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் என்ற போட்டி எல்லா மாவட்டங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான போட்டி, வேட்பாளர் தேர்விலும் தீவிரமாகியிருக்கிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீரும் கலந்துகொண்டார். மறைமுகத் தேர்தல் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதுபற்றி வெளியே யாரும் சொல்லிக்கொள்ள வேண்டாம், உரிய நேரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். ஆனால், எப்போது வெளியிடப்படும் என்று சொல்லவில்லை. இந்த நிலையில்தான் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அடுத்த நாள் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர், ‘அப்படி ஒரு திட்டம் இல்லை. இருந்தால் உங்களைக் கூப்பிட்டுதான் சொல்லுவோம்’ என்று பதில் சொன்னார். ஆனால் ஓ.பன்னீர் பதில் சொன்ன சில மணித்துளிகளிலேயே மறைமுகத் தேர்தலுக்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அப்படியென்றால் ஆட்சியில் தனக்கு எந்த பிடிமானமும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்வதாக இந்த அரசாணை வெளியீடு அமைந்திருப்பதாக ஓ.பன்னீர் கருதுகிறார். ஏற்கனவே அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க, அவரது ஆதரவு அமைச்சரான மாஃபா தவிர வேறு யாரும் வரவில்லை. மறுநாள் அமைச்சரவைக் கூட்டத்துக்காக எல்லாரும் சென்னையிலேயே இருந்தும் எந்த அமைச்சரும் ஓ.பன்னீரை வரவேற்க விமான நிலையத்துக்கு வரவில்லை. இதுவும் பன்னீரைப் புறக்கணிக்கும் படலத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது

இதன் தொடர்ச்சிதான் உள்ளாட்சித் தேர்தலிலும் நேரடியாக எதிரொலித்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் தொடர்புகொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வில் தனது ஆதரவாளர்கள் இத்தனை பேருக்கு சீட் வேண்டும் என்றும், அவர்களை டிக் செய்துகொள்ளுமாறும் சொல்லியிருக்கிறார். அமைச்சர்களாக இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் பலர் இதை முதல்வர் எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடியோ, ‘பாத்துக்கலாம், பாத்துக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதேவேளை, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மேலே இருந்து கீழே வரைக்கும் அவரது ஆதரவாளர்களையே வேட்பாளர்களாக அறிவிக்கத் திட்டமிட்டு அதற்கான பட்டியல் வேகமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. கட்சியின் அடி முதல் நுனி வரை தனது அக்மார்க் ஆதரவாளர்களுக்கு உள்ளாட்சிப் பதவிகள் கொடுக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலமாகக் கட்சிக்குள் தனது பிடியை பலப்படுத்திக் கொள்வதுதான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம். தன்னால் பதவி பெற்றவர்கள் உட்கட்சி அளவிலும் தன் பின்னாலேயே நிற்பார்கள் என்பதால் அவர்களை வைத்தே பிறகு நடைபெறும் பொதுக்குழுவில் ஏகமனதாக தான் பொதுச் செயலாளர் ஆவதுதான் என்பதே எடப்பாடி பழனிசாமியின் இப்போதைய அதிரடித் திட்டம்.

இந்த மறைமுகத் தேர்தல் என்பது கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று ஒரு கருத்து இருக்கிறது. அது உண்மைதான் என்றாலும், அதைவிட உண்மை... அதிமுகவில் தனது இடத்தை நிலைப்படுத்திக்கொள்வதற்கும், தன் ஆட்களை முழுக்க முழுக்க கட்சியின் அனைத்து நிலைகளிலும் நிரப்பி அதன்பின் சட்டமன்றத் தேர்தல், உட்கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதும்தான் எடப்பாடியின் திட்டம்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

“அதுவரை ஓ.பன்னீரின் கை ‘தாமரை’ பூ பறித்துக் கொண்டிருக்குமா? “என்ற கேள்வியை கமெண்ட் ஆக இட்டு ஸ்மைலியை உதிர்த்தது ஃபேஸ்புக்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon