மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 22 செப் 2020

கோவை: மேயர் பதவிக்கு மோதும் சேட்டுப் பெண்ணும் தமிழ் பெண்ணும்!

கோவை: மேயர் பதவிக்கு மோதும் சேட்டுப் பெண்ணும் தமிழ் பெண்ணும்!

அரசியலுக்கும் கலை உலகத்துக்குமான தொடர்பு இன்று நேற்றல்ல. அந்த வகையில் அதிமுகவின் கோவை மாநகர மேயர் வேட்பாளர் இவர்தான் என்று ஓர் புகைப்படம் பார்ப்பவர்களை எல்லாம் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த சோனாலி பிரதீப் மாடலிங்க்கில் ஈடுபட்டு வருபவர். பல அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள சோனாலி 2015,2016 ஆம் ஆண்டுகளில் மிசஸ் கோயமுத்தூர் பட்டத்தையும் 2017 ஆம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற மிசஸ் இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற்றிருக்கிறார்.

மாடலிங்கோடு கோவை மாநகரின் பல்வேறு பள்ளிகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறார். கடந்த நவம்பர் 12 முதல் 18 வரை மொரிஷீயஸ் நாட்டில் நடைபெற்ற மிசஸ் இந்தியா யுனிவர்சல் எர்த் என்ற திருமணமானவர்களுக்கான அழகிப் போட்டியில் கலந்துகொண்டார். அப்போட்டியில் பங்கேற்ற 41 அழகிகளில் சோனாலிதான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்மையில் அதிமுகவில் சேர்ந்த சோனாலி தான் மொரிஷியஸ் நாட்டில் நடந்த போட்டியில் பெற்ற பட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியிடமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் காண்பித்து வாழ்த்தும் பெற்றார். கோவை முழுதும் சோனாலியை வாழ்த்தி போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு சோனாலியும் விருப்ப மனு கொடுத்திருந்தார். இப்போது மறைமுகத் தேர்தல் என்று ஆகிவிட்ட நிலையில் சோனாலியை கவுன்சிலர் ஆக்கி அதன் பின் மேயர் ஆக்கவும் சிலர் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள்.

இதுபற்றி கோவை அதிமுகவில் நாம் விசாரித்தபோது, “சரளமாக தமிழ் பேசினாலும் சோனாலி சேட்டுப் பெண். இந்த சேட்டுப் பெண்ணுக்கும் ஏற்கனவே மேயராக கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கும் கோவை புறநகர் மாவட்ட எம்.ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகரின் மனைவி டாக்டர் ஷர்மிளாவுக்கும் கடுமையான போட்டி இருக்கலாம். சேட்டு லாபி வெல்கிறதா, தமிழ் லாபி வெல்கிறதா என்று கட்சிக்குள் பேச்சாக இருக்கிறது” என்று புதிய தகவல்களைக் கூறினார்கள்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon