மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

21 வயதில் சாதனை:இந்தியாவின் இளைய நீதிபதி!

21 வயதில் சாதனை:இந்தியாவின் இளைய நீதிபதி!

21 வயதில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்தியாவின் இளைய நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்த இளைஞர்.

ராஜஸ்தானில் நீதித்துறை பணிகளுக்கான வயது 23ஆக இருந்தது. ஆனால் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நீதிபதிகளுக்கான தேர்வில் 21 வயது பூர்த்தியானவர்களும் கலந்துகொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, இளைஞர்கள் பலர் நீதித்துறை பணிக்கு தயாராகி வந்தனர்.

இந்நிலையில், ஜெய்ப்பூர் மன்சோரவர் பகுதியைச் சேர்ந்த மயாங்க் பிரதாப் சிங் என்ற இளைஞர் இந்தியாவின் இளைய நீதிபதி பெருமையைப் பெற்றுள்ளார். 2014 ஏப்ரலில் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிரதாப் சிங் 2019 ஏப்ரலில் தான் தனது சட்டப் படிப்பை முடித்துள்ளார். இதற்கிடையே அம்மாநிலத்தில் 2018ல் நடைபெற்ற ராஜஸ்தான் நீதித்துறை பணிகளுக்கான தேர்வில் கலந்துகொண்டுள்ளார். முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் மயாங்க் பிரதாப் சிங் நீதிபதி பதவிக்குத் தேர்வாகியுள்ளார். நீதிபதி பதவிக்குத் தேர்வு எழுதிய அவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து மயாங்க் பிரதாப் சிங், சமுதாயத்தில் நீதிபதிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும் நீதித்துறை சேவையை நோக்கி நான் ஈர்க்கப்பட்டேன். என்னுடைய வெற்றிக்கு எனது குடும்பத்தினரும், ஆசிரியர்களும் சிறந்த பங்காற்றினர்.

நீதித்துறை தேர்வுக்கு வயது குறைக்கப்பட்டதால்தான் என்னால் தேர்வு எழுத முடிந்தது. நான் தேர்வாகி இருப்பதன் மூலம் அதிக மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்காகச் சிறந்த முறையில் பணியாற்றுவேன். தினமும் 12-13 மணி நேரம் படிப்பேன், நீதிபதி பதவிக்கு நேர்மை என்பது மிக முக்கியமானது. அதன்படி நேர்மையாகப் படித்தேன். அதுதான் எனக்கு வெற்றியைக் கொடுத்தது என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon