மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

அயோத்தி தீர்ப்புக்கு எதிர்ப்பு: சென்னையில் ஆர்ப்பாட்டம்!

அயோத்தி தீர்ப்புக்கு எதிர்ப்பு: சென்னையில் ஆர்ப்பாட்டம்!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்குத் தரப்படுகிறது என்றும் அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டலாம் என்றும் தெரிவித்தது. மசூதி கட்டுவதற்கு அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலத்தை சன்னி வஃக்ப் வாரியத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தீர்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் போன்ற தலைவர்கள், இந்தத் தீர்ப்பு சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டும் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில்கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு நியாயமற்றது என்றும், அதை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (நவம்பர் 21) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தவாக தலைவர் வேல்முருகன், எஸ்டிபிஐ தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், சட்டமன்ற உறுப்பினர் தனியரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

முதலில் பேசிய பழ.நெடுமாறன், “உச்ச நீதிமன்றம் கட்டப்பஞ்சாயத்து மன்றமாக இன்றைக்கு மாறியிருக்கிறது. உச்ச நீதிமன்றமே இப்படித் தடுமாறுமானால் நாட்டில் நீதி எப்படி நிலைக்கும். மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பதுதான் வழக்கு. உச்ச நீதிமன்றம் அதுகுறித்து எதுவுமே சொல்லவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு அளித்திருக்கிறோம் என்ற நீதிமன்றம் சொல்கிறதென்றால் சட்டம் எங்கே சென்றது” என்று கேள்வி எழுப்பினார்.

ஜவஹிருல்லா பேசும்போது, “தீர்ப்பு வரும் நவம்பர் மாதம் நெருங்கியதும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தீர்ப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கூறுகிறார். பிரதமர் நரேந்திர மோடியும் இதைத்தான் கூறுகிறார். ஏன் இப்படி தலைகீழாக மாறினார்கள். அதற்கு விடையாக வந்ததுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால் இருக்கும் பாசிசத்தை எதிர்த்து இங்கு கூடியிருக்கிறோம். ராமருக்குக் கோயில் கட்ட வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதில், எங்களுக்குப் பிரச்சினையும் இல்லை. ஆனால், 400 ஆண்டுக்கால பழைமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை இடித்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதியைக் கட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்று தெரிவித்தார்.

ராமர் கோயில் அங்கு இல்லை, ராமர் சிலைகளை 1949ஆம் ஆண்டு அந்த இடத்தில் வைத்தது சட்ட விரோதம், பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றமே தெரிவிப்பதாகக் கூறிய திருமாவளவன், இத்தனையும் சொல்லிவிட்டு, இடித்தவர்களுக்கே இடம் சொந்தம் எனக் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon