மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஈகுவாடரில் நித்யானந்தா: முன்னாள் சிஷியை தகவல்!

ஈகுவாடரில் நித்யானந்தா: முன்னாள் சிஷியை தகவல்!

குழந்தைகளைக் கடத்தி ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாகச் சாமியார் நித்யானந்தா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அகமதாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக போலீசார் குற்றம்சாட்டும் நிலையில், அவர் ஈகுவாடரில் இருப்பதாக அவரது முன்னாள் உதவியாளர் சாரா ஸ்டீபனி லாண்ட்ரி தகவல் தெரிவித்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த இவர் முன்னதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு உதவியாளராக இருந்தார். நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளைக் கடத்தி வைத்துத் துன்புறுத்துகிறார் என்று இவர் ஏற்கனவே பல வீடியோக்கள் மூலம் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் புகார் அளித்த நிலையில், தற்போது சாரா ஸ்டீபனி லாண்ட்ரியும் மீண்டும் அதே புகாரைத் தெரிவித்துள்ளார்.

மேலும், நித்யானந்தா தற்போது ஈகுவாடரில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நித்யானந்தா அவரது பக்தர்களை மூளைச் சலவை செய்வதாகவும், நித்யானந்தாவுடன் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் மூன்று பெண்கள், ஈகுவாடரில் புதிய ஆசிரமத்தை உருவாக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,

”மா நித்யா க்னத்மானந்த சுவாமி என்று அழைக்கப்படும், தென்னிந்தியாவைச் சேர்ந்த காயத்ரி என்ற மென்பொறியாளர், ரஞ்சிதா மேனன் (நித்யானந்தமாயி சுவாமி) மற்றும் வனேசா பெய்னே (மா நித்யானந்தா யோகா சுவாமி) ஆகியோர் ஈகுவாடரில் நித்யானந்தாவுக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள். ஜனார்த்தனன் சர்மாவின் மூத்த மகள் தத்வபிரியாவும் நித்யானந்தாவுடன் ஈகுவாடரில் இருக்கலாம்” என்றும் தகவலளித்துள்ளார்.

மேலும், அவர் இருக்கும் இடத்தை யாரும் அறியக்கூடாது என்பதற்காக கிரீன் ஸ்கீரினை பயன்படுத்தி நித்யானந்தா மக்களை முட்டாளாக்குகிறார். ஈகுவாடரில் உள்ள தனது புதிய மையத்தை ஆன்மீக ரீதியாக இணைக்கத் தங்க நகைகளை அனுப்புமாறு அவர் மக்களிடம் கேட்கிறார்” என்றும் சாரா ஸ்டீபனி லாண்ட்ரி கூறியுள்ளார்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon