மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

கமலை நலம் விசாரித்த ஸ்டாலின்

கமலை நலம் விசாரித்த ஸ்டாலின்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனை, ஸ்டாலின் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டு நடந்த விபத்தில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதற்காக, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. அதன்பிறகு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்ததாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்ததாலும் அந்த கம்பி அகற்றப்படாமலேயே இருந்தது.

இந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (நவம்பர் 22) கமல்ஹாசனுக்கு டைட்டேனியம் கம்பியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று காலை நடைபெற்ற அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது. தலைவர் தற்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் நலமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் கமல்ஹாசனை திமுக தலைவர் ஸ்டாலின், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோரும் கமல்ஹாசனை நலம் விசாரித்தனர்.

இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நண்பர் 'கலைஞானி' கமல்ஹாசன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்த பிறகு அதிமுகவை விட அதிகமாக திமுகவைத்தான் கமல்ஹாசன் விமர்சித்துவருகிறார். திமுகவும் பதிலுக்கு கமல்ஹாசனை விமர்சித்திருந்தது. மேலும், சில நாட்களாக ரஜினி-கமல் அரசியல் இணைவு குறித்து அரசியல் வட்டாரங்களில் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதுபோலவே உள்ளாட்சித் தேர்தலும் நெருங்கும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால், நட்பின் அடிப்படையில் கமல்ஹாசனை ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் என்கிறார்கள் திமுகவினர்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon