மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: பைனாப்பிள் பாயசம்

கிச்சன் கீர்த்தனா: பைனாப்பிள் பாயசம்

பால் பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசிப் பாயசம்... நாள் கிழமைகளில் இந்த மூன்றையும் விட்டால் வேறு தெரியாது பலருக்கும். ஒரு மாறுதலுக்கு பைனாப்பிள் பாயசம் செய்து பாருங்களேன்... செய்வது ரொம்ப சிம்பிள்... பழம் சாப்பிட அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு அதைக் கொடுத்த மாதிரியும் இருக்கும். ஒருமுறை இதை ருசித்தவர்கள் பைனாப்பிள் பாயசத்தை மட்டுமல்ல, உங்களையும் மறக்க மாட்டார்கள்.

என்ன தேவை?

காய்ச்சிய பால் - ஒரு லிட்டர்

கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்

ஜவ்வரிசி - அரை கப்

வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

அன்னாசிப்பழத் துண்டுகள் (டின்டு பைனாப்பிள் அல்லது 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேகவைத்து ஆறவைத்த ஃபிரெஷ் பைனாப்பிள்) - ஒரு கப்

எப்படிச் செய்வது?

பாலை அடி கனமான பாத்திரத்தில் விட்டு, அது சுண்டும் அளவுக்குக் காய்ச்சவும். மற்றோர் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். ஜவ்வரிசியை நன்கு கழுவி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, மீண்டும் அதே மாதிரி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து வடிகட்டுவதை மூன்று முறை செய்யவும். அப்போதுதான் ஜவ்வரிசியில் உள்ள பசைத்தன்மை நீங்கும்.

பால் கொதித்ததும் அதில் தயாராக உள்ள ஜவ்வரிசியைச் சேர்த்து வேகவிடவும். பிறகு கண்டன்ஸ்டு மில்க்கை அதில் சேர்க்கவும். கண்டன்ஸ்டு மில்க் சேர்ப்பதால் சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. பாயசம் நன்கு கொதித்து கெட்டியானதும் ஆறவிடவும். பிறகு எசென்ஸையும் பைனாப்பிள் துண்டுகளையும் சேர்க்கவும். அழகான கண்ணாடிப் பாத்திரத்தில் கொஞ்சம் பாயசத்தை விட்டு, மேலே பைனாப்பிள் துண்டுகளால் அலங்கரித்து ஜில்லெனப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: மோர் ரசம்

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது