மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி: தினகரன்

உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி: தினகரன்வெற்றிநடை போடும் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலைத் தடுத்து நிறுத்த திமுகவும், அதிமுகவும் கூட்டாகச் செயல்படுகின்றன என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி, நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறைக்கான அரசாணையை நேற்று (நவம்பர் 20)வெளியிட்டது தமிழக அரசு. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தினகரன்,

 “தோல்வி பயத்தாலும், சுய அரசியல் லாபத்திற்காகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தவிர்த்து வந்தது பழனிசாமி அரசு. உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான அணுகுமுறையால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடுவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவசரம் அவசரமாக மேயர், நகர மன்றதலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கும் என்று ஓர் அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றியிருக்கிறது.

மக்களிடம் செல்வாக்கை இழந்திருக்கும் இந்த நேரத்தில் நேரடித் தேர்தல் நடந்தால் மிகப்பெரிய தோல்வியை தாங்கள் சந்திக்க நேரிடும் என்று அஞ்சியே இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது பழனிசாமி அரசு” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஏற்கனவே, நான்கு மாவட்டங்களை பிரித்து புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி வார்டுகள் எப்படி பிரிக்கப்பட்டிருக்கிறது, அந்த பதவிகளுக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் என்ன என்பதையெல்லாம் திட்டமிட்டு இன்று வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை எடப்பாடி அரசும், தேர்தல் ஆணையமும்.

எதிர்பார்த்தபடியே இந்தக் காரணத்தைச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்தின் வாயிலாக தடுப்பதற்கான முயற்சிகளை திமுக மேற்கொண்டிருக்கிறது. இப்போது இந்த அவசரச் சட்டத்தின் மூலம் தேர்தலை நடத்த விரும்பாதவர்களுக்கு இன்னொரு காரணத்தையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது பழனிசாமி அரசு. இந்த செயல்களையெல்லாம் பார்க்கும் போது உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கைகோர்த்து செயல்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளை சீரழிக்கும் சுயநலம் கலந்த இந்த நடவடிக்கைகளை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இரு கட்சிகளும் மறந்துவிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார் தினகரன்.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon