மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

மறைமுகத் தேர்தல் ஏன்? தமிழக அரசு

மறைமுகத் தேர்தல் ஏன்? தமிழக அரசு

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 19ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனினும் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து அவசரச் சட்டம் பிறப்பித்து தமிழக அரசு நேற்று (நவம்பர் 20) அரசாணை வெளியிட்டது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணையில் அளித்துள்ள விளக்கத்தில், “மேயரோ அல்லது மற்ற தலைவர்களோ ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், பெரும்பாலான கவுன்சிலர்கள் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கும் சூழல் ஏற்படும்போது நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. வேறு, வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் சில சமயங்களில் மாநகர, நகர மன்றக் கூட்டங்களைக் கூட்டுவதே சிக்கலாகி விடுகிறது.

மறைமுகத் தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும். அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு கூடும். மறைமுகத் தேர்தலால் உள்ளாட்சி அமைப்புகள் சுமுகமாகச் செயல்படும். 200க்கும் அதிகமான கவுன்சிலர்களைக் கொண்ட சென்னை, மதுரை போன்ற இடங்களில் சிறப்பாகப் பணியாற்ற இம்முறை வழிவகுக்கும். மறைமுகத் தேர்தலே சிறப்பான நிர்வாகத்தைக் கொடுக்கும் என்ற பரிந்துரைகள், மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்தன. இதனால்தான் மறைமுகத் தேர்தல் முறை என்ற முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

ஆனால், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நேரடித் தேர்தலைக் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்தத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது. அதற்குத் தமிழக அரசு சொன்ன காரணம், “மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதே சிறந்த முறையாக இருக்கும் என்றும் அப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் சிறப்பாகவும் அமைதியாகவும் நடக்கும் என்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். அதேபோல, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், துறை அதிகாரிகளும் இதையே வலியுறுத்தினர்.

மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அவர்களைத் தேர்ந்தெடுத்த வார்டுகளின் வளர்ச்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவர். மற்ற வார்டுகள் மீது கவனம் செலுத்த மாட்டார்கள் என்றும் அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதால் அவர்களால் தனித்து இயங்கி மக்களுக்குச் சிறப்பாக சேவை செய்ய முடியாது. உள்ளாட்சி அமைப்புகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த சுயமாக முடிவெடுக்க முடியாமலும் போகும்.

இவற்றையெல்லாம் அரசு கவனமாகப் பரிசீலித்து மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை நேரடியாக மக்களே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற தீர்மானித்தது. இதன்மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நல்ல நிர்வாக முறையைக் கொண்டு வர முடியும். மக்களுக்காக உள்ளாட்சிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள இயலும். இந்த நோக்கங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான சட்டங்களைத் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அதை மீண்டும் மாற்றியமைத்துள்ளது தமிழக அரசு.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மறைமுகத் தேர்தல் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அதிமுக அரசு முயன்றுள்ளது. இதைச் சொன்னால் திமுக ஆட்சியில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டதே என்று கேள்வி எழுப்புவார்கள். திமுக ஆட்சியில் அப்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாததால் மறைமுகத் தேர்தல் முறை மாற்றப்பட்டு நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. ஆகவே தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் மறைமுகத் தேர்தல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபோலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “ஏற்கனவே மறைமுகத் தேர்தலில் கிடைத்த அனுபவத்தின் மூலம்தான் 2011இல் நேரடித் தேர்தல் கொண்டுவரப்பட்டது, தற்போது மீண்டும் மறைமுகத் தேர்தல் கொண்டு வருவது ஏற்புடையதல்ல. மறைமுகத் தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். உள்ளாட்சிப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடந்தால் அதிமுக, பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது” என்று விமர்சித்துள்ளார்.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon