மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: பாமக, தேமுதிக: இரண்டில் ஒன்று போதும் - எடப்பாடி முடிவு!

டிஜிட்டல் திண்ணை:  பாமக, தேமுதிக:  இரண்டில் ஒன்று போதும் - எடப்பாடி முடிவு!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“கூட்டிக் கழிச்சி பாரு... கணக்கு சரியாதான் வரும்” என்ற ரஜினி டயலாக் பேசும் டிக்டாக் காட்சியொன்று முதலில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது. அதை ரசித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த செய்தியை டைப்பிங் செய்துகொண்டிருந்தது வாட்ஸ் அப்.

“உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு தடாலடி மாற்றங்களை அரசியலில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேயர், நகராட்சித் தலைவர்களுக்கு நேரடி தேர்தல் இல்லை என்பதை அரசு தெளிவுபடுத்திவிட்ட நிலையில் இதை அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இமேஜ் உருவாக்கத்துக்கான மெகா கூட்டணியெல்லாம் தேவையில்லை, மைலேஜ் கொடுப்பதற்காக மினிமம் கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

உள்ளாட்சித் தேர்தல் என்ற பேச்சு வந்தபோதே அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘இப்போதைக்கு வேணாம். கூட்டணிக் கட்சிகளோட தொல்லை தாங்க முடியாது. இதனால கூட்டணியே உடைஞ்சாலும் ஆச்சரியமில்லை’ என்றெல்லாம் எடுத்துச் சொன்னார். ஆனால் முதல்வர் அப்போது, ‘அதெல்லாம் சரி பண்ணிக்கலாம்’ என்றுதான் நினைத்தார்.

ஆனால் போகப் போக உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல் அதிகமாக ஆரம்பித்தது. மொத்தம் இருப்பதோ 15 மேயர்கள். இதில் பாமக 2, தேமுதிக 2, பாஜக 2 , தமாகாவும் 2 என்று பங்கு போட ஆரம்பிக்க இதன் விளைவாக அதிமுகவுக்குள்ளேயே அதிருப்திக் குரல்கள் எழ ஆரம்பித்தன. கோவை மாநகராட்சியை பாஜக கேட்டது. ஆனால் அமைச்சர் வேலுமணியோ, ‘உள்ளாட்சித் துறை அமைச்சரோட சொந்த மாநகராட்சியை எப்படி இன்னொரு கட்சிக்குக் கொடுக்க முடியும்?’ என்று சொல்லிவிட்டார். நாகர்கோவிலை பாஜக கேட்டது. ஆனால் தளவாய் சுந்தரமோ, ‘இவர்தான் மேயர் வேட்பாளர்’என்று அண்மையில் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த ஒருவரைக் காட்டி கட்சியினரிடம் அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிகளில் பேசுகிறார்.

பாஜகவோடு இப்படி மல்லுக்கட்டு என்றால், தேமுதிகவோ, ‘குழு போட்டுவிட்டோம் எப்போது பேசப் போறீங்க?’ என்று அதிமுகவை நச்சரிக்கத் தொடங்கியது. அதிகாரபூர்வப் பேச்சுவார்த்தை தொடங்காதபோதே, ‘25% இடங்கள் வேணும், குறிப்பா மதுரை மேயர் வேணும். அது கேப்டன் மண்’ என்று ஆரம்பித்தனர் தேமுதிகவினர். இதைக் கேட்டு செல்லூர் ராஜுவும், ராஜன் செல்லப்பாவும் கொந்தளித்துவிட்டனர். ‘மதுரையெல்லாம் கேட்டு இங்கிட்டு வராதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே விரட்டிவிட்டனர். மதுரை இல்லையென்றால் திருப்பூர் என்று தேமுதிக திருப்பிக் கேட்க, கோவையைக் கொடுக்கவில்லையென்றால் திருப்பூரைக் கொடுங்க என்று பாஜகவும் கேட்க, அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன்னரே பற்பல தேக்கங்கள் நிலவின அதிமுக அணியில். இவர்களுக்கு இடையில் சேலம் அல்லது சென்னை மாநகராட்சியைக் கொடுங்கள் என்று அதிமுகவின் அடிமடியிலேயே கை வைத்தது பாமக.

இப்படியெல்லாம் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்கள் நெருக்கியடித்த நிலையில்தான், ஒரேயடியாக மறைமுகத் தேர்தலைக் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இனி கவுன்சிலர்கள் கையில்தான் எல்லாமே. இதனால் கூட்டணிக் கட்சிகளின் குரலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்.

அதுமட்டுமல்ல, அமைச்சரவைக் கூட்டத்தின்போது சக அமைச்சர்களிடம் முதல்வர் வெளியிட்ட இந்தக் கூட்டணி அதிருப்தியை அப்படியே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படுத்திவிட்டார். எல்லாரும் தனியாக நிற்கத் தயாரா என்று கேட்டிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அந்த அளவுக்குப் போகாது என்றாலும் அதிமுக அணியில் பாமக, பாஜக போதும் என்ற எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தன் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான சீட்டுகள் கிடைத்ததில் பாமகவுக்குப் பங்கிருக்கிறது என்பதை எடப்பாடி மறக்கவில்லை. அதேபோல பாஜகவைப் பக்கத்தில் வைத்துக்கொள்வது எல்லா விதத்திலும் ஒரு பலம் என்பதையும் அவர் உணராமல் இல்லை.

ஆனால், தேமுதிகவின் அணுகுமுறைகளில் ஆரம்பத்திலிருந்தே எடப்பாடிக்குத் திருப்தியில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் அணுகுமுறைகள் அவருக்கு உடன்பாடில்லை. ஆனாலும் பாஜகவின் வற்புறுத்தலால்தான் சம்மதித்தார். பாமகவுக்கு இணையாக சீட் என்பதே அக்கட்சியின் முதல் நிபந்தனையாக இருந்தது. வடமாவட்டங்களில் பாமக நல்ல தோழனாக இருக்கும்போது தென்மாவட்டங்களில் தனக்குக் கை கொடுக்காத தேமுதிகவை எதற்குக் கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறார் எடப்பாடி. அதனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அநேகமாக தேமுதிகவைக் கழற்றிவிட்டு பாமக, பாஜக போதும் என்பதுதான் எடப்பாடியின் கூட்டணித் திட்டம். அதற்கேற்ப காய்கள் மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டு வருகின்றன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon