மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

கீழடி அகழாய்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி: மத்திய அமைச்சர் தகவல்!

கீழடி அகழாய்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி: மத்திய அமைச்சர் தகவல்!

கீழடி ஆய்வுகள் குறித்த வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் விளக்கம் அளித்துள்ளார்.

கீழடியில் 2015 முதல் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி வருகிறது. பழைமையான நகர நாகரிகம் கீழடியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. முதல் மூன்று அகழாய்வு பணிகளில் 7,818 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வில் 5,820 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கிடையே கீழடி தொடர்பாக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு நேற்று முன்தினம் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல், “கீழடியைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாநிலங்களவையிலும் இதே பிரச்சினை எழுப்பப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று (நவம்பர் 20) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுந்து, “கீழடியில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலத்தவை என்பது உண்மையா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்து விளக்கம் தர வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பண்பாட்டுத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், “கீழடியில், தமிழ்நாடு தொல்பொருள் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. ஆறு முதல் மூன்றாம் நூற்றாண்டுக் கால கட்டத்தைச் சேர்ந்தவை என, கரிமப் பகுப்பு ஆய்வுச் சோதனைகளின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வைகோ, கீழடி ஆய்வுகளில், இந்தியத் தொல்பொருள் துறையின் பங்கு என்ன, அதற்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு என்ற கேள்விகளையும் எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரகலாத் சிங் படேல், “இந்தியத் தொல்பொருள் துறை, 2014-15, 2015-16, 2016-17ஆம் ஆண்டுகளில் கீழடியில் மூன்று களங்களில் ஆய்வுகள் மேற்கொண்டது. அதற்காகச் செலவிடப்பட்ட நிதி 2014-15ஆம் ஆண்டில் 7,70,010 ரூபாய், 2015-16ஆம் ஆண்டில் 48,50,798 ரூபாய் 2016-17ஆம் ஆண்டில் 35,50,000 ரூபாய், 2017-18ஆம் ஆண்டில் 22,50,000 ரூபாய்” என்று குறிப்பிட்டார்.

கீழடியில் கிடைத்த பழம்பொருட்களைக் காட்சிப்படுத்த, அங்கே ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா, நாடு முழுமையும் உள்ள பிற அருங்காட்சியகங்களில் அந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமா என்று வைகோ மீண்டும் கேள்வி எழுப்ப, “கீழடியில், தமிழ்நாடு அரசு ஓர் அருங்காட்சியகம் அமைக்கிறது” என்று தெரிவித்தார் மத்திய அமைச்சர்.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது