மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

கரூர் ஐடி ரெய்டு: யார் இந்த ‘ஷோபிகா’ சிவசாமி?

கரூர் ஐடி ரெய்டு: யார் இந்த ‘ஷோபிகா’ சிவசாமி?

வீட்டு அலமாரியில் 36 கோடி ரூபாய் பணம், 10 கிலோ தங்கம், மொத்தமாக 435 கோடி வரி ஏய்ப்பு என கரூரைச் சேர்ந்த கொசுவலை தயாரிக்கும் தொழிலதிபர் சிவசாமி, ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர் எப்படி இவ்வளவு பெரிய வரி ஏய்ப்பில் சிக்க முடிந்தது? அவரது வளர்ச்சியின் பின்னணி என்ன? வீட்டு அலமாரியிலேயே 30 கோடிக்கும் மேல் பணம் வைத்துள்ள நபர், இன்னும் எங்கெல்லாம் எவ்வளவு பணத்தை வைத்திருப்பார்? அரசியல் பின்னணி ஏதும் இவருக்கு இருக்கிறதா? என பல்வேறு கேள்விகளை இந்த கரூர் ஐடி ரெய்டு ஏற்படுத்தியிருக்கிறது. இவை அனைத்திற்கும் முன் எழும் முக்கியமான கேள்வி, யார் இந்த சிவசாமி? என்பதே.

அதற்கு முன் சுருக்கமாக கரூர் நகரத்திற்கும் கொசு வலைக்குமான வரலாற்றைப் பார்த்து விடுவோம்.

கரூர் நகரத்தின் கொசுவலை வரலாறு

கரூர் நகரம் உயர் தர கைத்தறி தொழிலுக்கு புகழ் பெற்றது. நாமக்கல் போலவே கரூர் பகுதியும் வண்டிக்கு பாடி கட்டுவது என சொல்லப்படும் பேருந்து/லாரி கட்டுமானத் தொழிலுக்கும் பிரபலமாகும். இவை அனைத்தையும் விட கொசுவலையை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதிலும் முதன்மை வகிக்கிறது கரூர்.

கொசுக்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற நோய்களைத் தடுப்பதில் கொசு வலைகள் பெரும்பங்காற்றுகின்றன. கொசுக்களின் தாக்குதலில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றக்கூடிய கொசு வலைகளை இந்தியச் சந்தையில் விற்பதில் சீனா, வங்கதேசம், நேபாளம், தைவான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் களத்தில் இருக்கின்றன. இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொசு வலைகளை விட தரத்திலும், நேர்த்தியிலும் சிறந்தவையாக இந்தியாவிலேயே கரூரில் உற்பத்தியாகும் கொசு வலைகள் கருதப்படுகிறது. மேலும், கரூர் கொசுவலைகளுக்கென்றே சந்தையில் தனி மதிப்பு உண்டு. 2,000 பேல்கள் முதல் 3,000 பேல்கள் வரை ராணுவத்துக்கு மட்டும் கரூர் நகரத்தில் இருந்து கொசுவலைகள் செல்கின்றன.

உலகளவில் கரூர், வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி தொழிலுக்கு அடுத்தபடியாக மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தரக் கூடியதாக இருந்து வருகிறது பாரம்பரிய கொசுவலை உற்பத்தி தொழில். கொசுவலைகள் மனிதர்கள் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பட்டுவளர்ச்சித் துறை, தோட்டக்கலைத் துறை, மருந்துப்பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்கள், விதைப் பண்ணைகளில் புதிய பயிர்கள் கண்டுபிடிப்புக்கு சூரிய ஒளி படாதவாறு பயிர்களை பாதுகாக்க, மெடிக்கல் பேக்கிங், நாற்றங்கால் அமைக்க என பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. கேரளம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற வனங்கள் நிறைந்த பகுதியில் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இலை தழைகள் விழாதவாறு தடுக்கவும் அதிக அளவில் கொசுவலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் கொசுவலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இங்கு தயார் செய்யப்படும் கொசுவலைகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மூலப்பொருட்களில் இருந்து கொசு வலை நூல் தயாரிக்க மட்டும், 75 யூனிட்கள் செயல்படுகின்றன. கொசுவலை நெய்ய, கரூர், சணப்பிரட்டி, தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட தறிகள் உள்ளன. மாதம், 1,500 டன் வரை, கொசுவலை உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த, 40 ஆண்டுகளாக கொசுவலை மட்டும் தயார் செய்து, விற்பனை செய்து வரும் தொழில் நகரமாகும் கரூர். திருப்பூருக்கு கார்மெண்ட்ஸ் என்றால், கரூர்-க்கு கொசுவலை. திருப்பூரைப் போலவே எண்ணற்ற தொழிலதிபர்கள், நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் என இயங்கி வரும் நகரம் கரூர். அப்படி எண்ணற்ற தொழிலதிபர்களுள் கரூர் ஷோபிகா இம்பெக்ஸ் நிறுவனத்தின் சிவசாமி தனித்துவம் வாய்ந்தவர்.

‘ஷோபிகா’ சிவசாமியின் வளர்ச்சி

கரூர் வெண்ணமலையைச் சேர்ந்த கொசுவலை தயாரிப்பு நிறுவனமான ஷோபிகா இம்பெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம். சிவசாமி. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியரின் மகனாகப் பிறந்த சிவசாமி, 1989ஆம் ஆண்டு டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். 1993ஆம் ஆண்டில் தனது தந்தை மாரப்பனிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலையை சிறிய அளவில் துவங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் ஷோபிகா இம்பெக்ஸ் வலைகள் இந்தியா முழுவதும் உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்பட்டன. பின்னர், நிறுவனம் பெரும்பாலும் ஏற்றுமதி சந்தைக்கு கவனம் செலுத்தத் துவங்கியது. பூச்சிக்கொல்லிகளுடன் இணைக்கப்பட்ட பாலிஎதிலீன் வலைகளை உற்பத்தி செய்வதில் இறங்கியது. 2004-2005 ஆகிய காலகட்டங்களில் ஷோபிகா இம்பெக்ஸின் ஆண்டு மொத்த வர்த்தகம் 70 கோடி ரூபாயாக இருந்தது.

டியூராநெட் பிராண்டின் உரிமையாளரான அமெரிக்காவின் முன்னணி பன்னாட்டு நிறுவனமான கிளார்க்குடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது கரூர் ஷோபிகா எம்பெக்ஸ். 2010ஆம் ஆண்டில், கிளார்க்கிடமிருந்து இந்த பிராண்டை வாங்கினார் சிவசாமி. அதன் பின்னர் ஷோபிகா எம்பெக்ஸ் கம்பெனியின் பிரீமியம் பிராண்டாக மாறியது இந்த டியூராநெட்.

டியூராநெட் என்பது உயர் அடர்த்தி கொண்ட பாலிஎதிலினிலிருந்து (எச்டிபிஇ) தயாரிக்கப்படும் கொசு படுக்கை வலையாகும். இதனை ஷோபிகா நிறுவனம் ரிலையன்ஸ் மற்றும் ஹால்டியாவிலிருந்து வாங்குகிறது. இந்த வலைகள் மூன்றாண்டுகள் வரை தாங்ககூடியவை. அதனால் சந்தையில் இதற்கான மவுசு அதிகம்.

அதன்பின்னர், ஆல்ஃபா மெத்திலின் என்ற கெமிக்கல் கலவை கலந்த கொசுவலையை தயாரிக்க ஆரம்பித்தார் சிவசாமி. உலகெங்கிலும் உள்ள மலேரியா கட்டுப்பாட்டு திட்டங்களில் பயன்படுத்த ஒரு புதுமையான தயாரிப்பாக உலக சுகாதார அமைப்பு பூச்சிக்கொல்லிகள் மதிப்பீட்டு திட்டம் (WHOPES) இந்த தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2013ல், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதிமூன்று LLIN(Long Lasting insecticide incorporated mosquito bed net) கொசு படுக்கை வலை தயாரிப்புகளில், WHO-ஆல் நடத்தப்பட்ட பல கள சோதனைகளுக்குப் பிறகு துணி வலிமை, ரசாயன செயல்பாடு மற்றும் ஆயுள் ஆகியவற்றின் அடிப்படையில் டியூராநெட் சிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இவரது வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. டியூராநெட் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலேரியாவால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகும் ஆப்பிரிக்க நாடுகள் முழுவதும் சிவசாமியின் டியூராநெட் கொசுவலை தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஷோபிகா எம்பெக்ஸ் ஆண்டுக்கு 550 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

ஆப்பிரிக்கா மட்டுமின்றி தாய்லாந்து, சீனா, மலேசியா, இலங்கை நாடுகளுக்கு கொசுவலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்ளன. கொசுவலை மட்டுமின்றி காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் துவங்கினார் சிவசாமி.

ஷோபிகா எம்பெக்ஸ் கடந்த 2017ஆம் ஆண்டு, மத்திய அரசின் `எக்ஸ்போர்ட் எக்ஸலன்ஸ்' விருதைப் பெற்றது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடைபெற்ற அம்பானி வீட்டுத் திருமணத்தில் கரூர் சார்பில் கலந்துகொண்ட ஒரே தொழிலதிபர் சிவசாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறை ரெய்டு

கொசுவலை ‘டூ’ காற்றாலை என தொழிலில் வெற்றிநடை போட்டு வந்த சிவசாமியின் ஷோபிகா எம்பெக்ஸ், வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரை அடுத்து தான், கடந்த நவ.15ஆம் தேதி கரூர், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சிவசாமியின் வீடு, நிறுவனம், தொழிற்சாலை ஆகிய இடங்களில் ரெய்டு நடத்தினர்.

நவம்பர் 16ஆம் தேதி, சிவசாமியின் வீட்டில் இருந்து ரூ.32.60 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போலி ஆவணங்கள் தாக்கல் தொடர்பாக இந்நிறுவனத்துக்கு ஜாப் வொர்க் நடைபெறும் இடங்கள் உட்பட மொத்தம் 20 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில் வரவு-செலவு கணக்குகள் தாக்கலில் போலியான ஆவணங்கள் தயாரித்து பல்வேறு முறைகேடுகளில் இந்நிறுவனம் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

மேலும், கணக்கில் காட்டப்படாத வருமானம் மூலம் பல்வேறு அசையா சொத்துகள் இந்நிறுவனத்துக்கு வாங்கப்பட்டதும், பங்குச்சந்தை, நிரந்தர வைப்புத்தொகை என பல்வேறு இடங்களில், இந்த நிறுவனத்தின் வருவாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்வாறாக ரூ.435 கோடி மதிப்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. அத்துடன் சிவசாமியின் வீட்டிலிருந்து 10 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

20 கார்களில் 80 அதிகாரிகள்

தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 20 வாகனங்களில் வந்திருந்த 80-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சிவசாமியின் வீடு, ஏற்றுமதி நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் ஜாப் வொர்க் நடைபெற்ற நிறுவனங்களில் 4 முதல் 5 நாட்கள் வரை தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த அதிரடி ஐடி ரெய்டு கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

மேலும், சிவசாமியின் விஸ்வரூப வளர்ச்சிக்கு பின்னணியில் அரசியல் புள்ளிகள் யாரேனும் இருக்கிறார்களா? வருமான வரித்துறை ரெய்டுக்கு பின்னணி என்ன? என முடிச்சுகள் அவிழாத பல கேள்விகள் எழுந்து வருகின்றன. கொசு வலையில் சாம்ராஜ்யம் அமைத்தவர், வருமான வரித்துறை வலையில் சிக்கியது கரூரில் உள்ள முக்கிய தொழிலதிபர்களுக்கு ‘கிலி’யை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் கரூர்வாசிகள்.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon