மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

'அதிசய' அரசியல்: ரஜினி-எடப்பாடி மோதல்!

 'அதிசய' அரசியல்: ரஜினி-எடப்பாடி மோதல்!

‘2021ஆம் ஆண்டு தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்’ என்ற நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அரசியலில் இணைய வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது தமிழக அரசியல், திரை வட்டாரங்களில் விவாதங்களை உண்டாக்கியிருக்கும் நிலையில், இதற்கு அதிமுக அமைச்சர்களும் எதிர்வினையாற்றி வருகின்றனர். எஸ்.ஏ.சந்திரசேகரின் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், ‘தேவைப்பட்டால் கண்டிப்பாக அரசியலில் இணைவோம்’ எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று (நவம்பர் 21) சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று நான் வாங்கிய விருதுக்கு தமிழ் மக்கள்தான் காரணம். ஆகவே, அந்த விருதை தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

நீங்களும் கமலும் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளீர்கள். அப்படி இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்?

“தேர்தல் நேரத்தில் அப்போது இருக்கும் சூழ்நிலைகளை பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு அது. அதுவும் நான் கட்சி ஆரம்பித்த பிறகு கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகளெல்லாம் சேர்ந்து அந்த முடிவை எடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அதனைப் பற்றி கூறுகிறேன். அதுவரை கருத்து கூற விரும்பவில்லை”

நீங்கள் இருவரும் இணைவது குறித்து அதிமுக அமைச்சர்கள் விமர்சித்துவருகின்றனர். மேலும், இது திராவிட பூமி, ஆன்மீக அரசியலுக்கு இங்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

“அது அவர்களுடைய கருத்து. 2021ஆம் ஆண்டு தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவிகிதம் நிகழ்த்துவார்கள்” என்று தெரிவித்தார்.

முதல்வர் பதில்

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை. 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம். ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும். 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார்” என்று தெரிவித்தார்.

சீமான் விமர்சனம்

ரஜினியின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆம், அதிசயம் நிகழும். 'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து,அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும், நடந்தே தீரும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வியாழன், 21 நவ 2019

அடுத்ததுchevronRight icon