மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

பாஜக சார்பில் ஒரு லட்சம் வேட்பாளர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக சார்பில் ஒரு லட்சம் வேட்பாளர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விருப்ப மனு பெறுவது உள்ளிட்ட அதற்கான பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம், உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணி நீடிக்குமா அல்லது மாற்றங்களை எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ, “மக்களவைத் தேர்தலின்போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். அதில் எந்தவித மாற்றமுமில்லை. புதிய கட்சிகளும் எங்களை அணுகுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும், திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவும் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறதே என்னும் கேள்விக்கு, “அது அவர்களின் கருத்து. அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்றே பதிலளித்துள்ளார். கூட்டணி தொடரும் என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் கூட்டணி முடிவு செய்யப்படவில்லை என்ற பாஜக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், “உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி எடுபடாது என்பதை நாங்கள் அனுபவபூர்வமாகக் கண்டிருக்கிறோம். கடந்த மக்களவைத் தேர்தலின்போதும், சட்டமன்ற இடைத் தேர்தலின்போதும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தோம். உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி இன்னும் அமைக்கப்படவில்லை. அதுகுறித்து அகில இந்தியத் தலைமைதான் முடிவு செய்யும். உள்ளாட்சித் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு அதிகமாக வேட்பாளர்களை பாஜக சார்பில் களமிறக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவதற்கு அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவே கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon