மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 3 டிச 2020

போலீஸ்‘லுக்’: கலக்கும் அஜித்

போலீஸ்‘லுக்’: கலக்கும் அஜித்

‘வலிமை’ படத்தின் போலீஸ் ‘லுக்’கில் அஜித் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பின் அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் படம் வலிமை. இப்படத்தில் மீண்டும் போனி கபூர்-ஹெச்.வினோத் கூட்டணியுடன் இணைகிறார் அஜித். இப்படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்கின்றார் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. போலீஸ் கதை என்பதால் இப்படத்தில் அஜித் கெட்டப் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்த நாளான நேற்று (நவம்பர் 20), சென்னையிலுள்ள பிரபல ஹோட்டலில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஹோட்டலில் இருந்த அஜித்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அஜித்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் அஜித்தை நெருங்கியிருக்கின்றனர்.

வழக்கமாக ஒரு படத்திற்கான புதிய கெட்டப்பில் இருக்கும் நாயகர்கள், புகைப்படங்கள், செல்ஃபி போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள். ஆனால், அஜித் சிரித்தபடியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஒட்ட வெட்டிய முடி, வித்தியாசமான மீசை என அஜித்தின் புதிய தோற்றம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் நாயகி குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைப்பார், அதே நேரத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு இயக்குநர் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழன், 21 நவ 2019