மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 நவ 2019

தேர்தல் நிதி பத்திரம், புதிய கல்விக்கொள்கை, கீழடி: நாடாளுமன்றம்

தேர்தல் நிதி பத்திரம், புதிய கல்விக்கொள்கை, கீழடி: நாடாளுமன்றம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கின.

பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உள்ளிட்ட 5 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை நேற்று(நவம்பர் 20) ஒப்புதல் அளித்தது. தேர்தல் நிதிப்பத்திரங்களை தற்போது யார் வேண்டுமானாலும் வாங்கி, தங்களுக்கு விருப்பப்பட்ட கட்சிக்கு அளிக்கலாம். அடையாளத்தைத் தெரிவிக்க வேண்டியது இல்லை என்று மாற்றியுள்ளது. மக்களவை இன்று காலை கூடியது முதல், இந்த விவகாரம் அனைத்தையும் எதிர்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டது.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தேர்தல் பத்திர முறைகேடு குறித்து விவாதிக்க, அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர். கறுப்புப் பணத்தை கட்சிக்குள் கொண்டு வரவே பா.ஜ.க அரசு, ரிசர்வ் வங்கி விதியை மீறி தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, தேர்தல் பத்திர விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்காததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் பத்திர விவகாரத்தை முன்வைத்து, மக்களவையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பின்னர் அவை விதி குறிப்பு புத்தகத்தைக் காட்டிப் பேசிய சபாநாயகர், “அவையில் அனைவரும் கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு அமளியில் ஈடுபடக்கூடாது” என்று கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து சுமார் நண்பகல் 12 மணியளவில் வெளிநடப்பு செய்தனர்.

புதிய கல்விக் கொள்கை

மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்வி வந்த போது, மதிமுக எம்பி. வைகோ கேள்வி எழுப்பினார். அப்போது அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவைக் குறிப்பிட்டு வைகோ பேசும்போது, ''இது புதிய கல்விக் கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை. நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக்கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன்” எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வைகோ, “எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. என் கேள்விக்குப் பதில் இல்லையே” எனக் கேட்டார். உடனே குறுக்கிட்ட அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு குறிக்கிட்டு வைகோவை அமரச் சொன்னார். அதற்கு பதிலளித்த வைகோ, “ உறுப்பினரின் உரிமையையும் தாங்கள்தானே காக்க வேண்டும். என் கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவே இல்லையே” எனக் கேள்வி எழுப்பினார்.

கீழடி: வைக்கப்பட்ட 3 கோரிக்கைகள்

கீழடி தொல்லியல் ஆய்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினரான சு.வெங்கடேசன் மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசினார். மதுரை எம்.பி கீழடி குறித்து கூறியதாவது, “தமிழக அரசு இந்த ஆண்டு கீழடியில் நடத்திய தொல்லியல் அகழாய்வில் கீழடியினுடைய காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை, நேற்றைய தினம் மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் நான் இந்த அவையின் முன் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைக்கிறேன்.

6 மற்றும் 12ஆம் வகுப்புகளின் என்சிஆர்டி பாடபுத்தகங்களில் தமிழ் நாகரிகத்திற்கான சங்ககாலத்தினுடைய காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு என்று இருக்கிறது. இதை திருத்தி அதன் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என வரும் கல்வி ஆண்டில் மாற்ற வேண்டும். இரண்டாவதாக, என்சிஆர்டியின் பல பாடங்களில் கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே கங்கை கரையில் பெரிய நகரங்கள் உருவானதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், கங்கைக்கரையில் பெரு நகரங்கள் உருவான அதே காலத்தில் வைகைக்கரையிலும் தமிழகத்தின் நதிக்கரையிலும் நகரங்கள் உருவாக்கி விட்டன எனக் குறிப்பிடவேண்டும்.

மூன்றாவதாக, அவ்வாறு தமிழகத்தின் நதிக்கரையில் கிமு ஆறாம் நூற்றாண்டில் உருவான நகரங்கள் எழுத்தறிவு பெற்றவையாக இருந்தது என்பதை மிக முக்கியமாக குறிப்பிட வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை நான் இந்த அவையின் கூறுகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காற்று மாசு

மாநிலங்களவையில் காற்று மாசுபாடு குறித்த கலந்துரையாடல்: என்.சி.பி தலைவர் வந்தனா சவான் கூறுகையில், "இந்த பிரச்சினையில் தேவையற்ற அரசியலை நாம் கொண்டு வருகிறோம். நாம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும், மேலும் சில வல்லுநர்கள் அல்லது பிரதிநிதிகளின் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படவேண்டும்".

சமாஜ்வாடி தலைவர் ரவி பிரகாஷ் வர்மா, "முழு நாட்டிலும் சராசரி காற்றின் தரக் குறியீட்டின் அளவுரு புள்ளியைத் தாண்டி மோசமடைந்து வருகிறது. கோவா, கேரளா, மேகாலயா மற்றும் மிசோரம் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் மக்கள் சுவாசிக்கக்கூடிய சுத்தமான காற்று இல்லை" என்று கூறினார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 21 நவ 2019