மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

முரசொலி - பையனூர் பங்களா: வேல்முருகன் எழுப்பும் கேள்வி!

முரசொலி - பையனூர் பங்களா: வேல்முருகன் எழுப்பும் கேள்வி!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று (நவம்பர் 21) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் வரை தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “இடைத்தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை சந்திக்க நினைத்தேன். அதற்காக இப்போது அவரைச் சந்தித்தேன். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் திமுகவுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் ” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “தேர்தலில் நேரடியாக நின்றால் வெற்றிபெற முடியாது, தோற்று விடுவோம் என்ற காரணத்தினால், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்துள்ளது. அதிமுகவின் தோல்வி பயத்தை இது காட்டுகிறது. மறைமுகத் தேர்தல் வன்முறை, கலவரங்கள் போன்றவற்றை உருவாக்கும் என்பதால் தேர்தலுக்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று தெரிவித்தவர்,

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்‌ஷேவும், அவரது சகோதரர் மகிந்த ராஜபக்‌ஷே பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, சிறுபான்மை மக்களாகிய தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகும். ஐ.நாவால் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவரை இந்தியா அழைப்பதும், அவருக்கு பிரதமர் மோடி சிவப்புக் கம்பளம் விரிப்பதும் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து முரசொலி நில விவகாரம் தொடர்பாக பேசிய வேல்முருகன், “முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்கள் தரப்பு எள் முனை அளவு கூட எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் கூறி அரசியல் ஆதாயம் தேடுவதற்கும், பாஜக சொல்லும் விஷயங்களை தமிழகத்தில் பெரிதாக்கி தமிழ் மக்களின் வாழ்க்கை சிக்கல்களை மறைக்கும் முயற்சியாகவுமே இதனை கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “முரசொலி மூலப்பத்திரத்தை கேட்டவர்கள் யாரும் ஆணையத்தில் ஆஜராகவில்லை. பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எடுத்துவரவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பையனூர் பங்களா யாருடையது என்பதை அனைவரும் அறிவர். இதுதொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டம் நடத்தியுள்ளனர். அது பஞ்சமி நிலம்தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முரசொலி விவகாரம் குறித்து பேசுபவர்கள் ஏன் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார்கள். ஸ்டாலின் மீது அவதூறு பரப்புவதற்கும், 5,8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, வேலையின்மை, ஐஐடி மரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை மறைப்பதற்கும்தான் இது நிகழ்த்தப்படுகிறது” என்றும் குற்றம்சாட்டினார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக முதலில் குற்றம்சாட்டியது பாமக நிறுவனர் ராமதாஸ்தான். அதற்கு ஸ்டாலின் பட்டாவுடன் பதிலளித்த நிலையில், மூலப்பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தினார். இந்த நிலையில் முரசொலி விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸை சாடியுள்ளார் தவாக தலைவர் வேல்முருகன்.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon