மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

அமைச்சரின் குறைதீர்ப்பு கூட்டம் : திமுக எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி மறுப்பு!

அமைச்சரின் குறைதீர்ப்பு கூட்டம் : திமுக எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி மறுப்பு!

கோவையில் நடந்த மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற திமுக எம்.எல்.ஏ திருப்பி அனுப்பப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் வரதராஜபுரம் மாநகராட்சிப் பள்ளியில் முதல்வரின் சிறப்புக் குறைதீர்ப்புக் கூட்டம் இன்று (நவம்பர் 21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிங்காநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தனது தொகுதியில் நடைபெறும் அரசு நிகழ்வில் கலந்துகொள்ள தனக்கே அழைப்பு அனுப்பப்படவில்லை என்று குற்றம்சாட்டிய கார்த்திக், குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு வந்தார். ஆனால், அவரை நிகழ்ச்சியில் பங்கேற்க விடாமல் வெளியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அவர் காவல் துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மக்கள் அளித்த மனுக்களையும் காட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “முதல்வரின் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இருந்தாலும் கூட நான் கலந்துகொள்வதற்காக வந்தேன். என்னிடத்தில் மக்கள் அளித்த ஆயிரக்கணக்கான மனுக்கள் உள்ளன. அந்த மக்களும் என்னுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், வெளியிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். அமைச்சர் வேலுமணி உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon