மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த தீவிரம் காட்டும் திமுக!

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த தீவிரம் காட்டும் திமுக!

மாநகராட்சி, நகராட்சித் தலைவர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு நவம்பர் 20 ஆம் தேதி அரசாணை வெளியிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பணம் கொடுத்து, பரவலாக அதிகார துஷ்பிரயோகம் செய்து இரு இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியால் அ.தி.மு.க.,விற்கு மக்கள் செல்வாக்கு பெருகிவிட்டது என்று கற்பனையான ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர், இப்போது களத்தில் நிலவும் உண்மையைப் புரிந்து கொண்டு விட்டார்.

நேரடித் தேர்தல் என்றால், அ.தி.மு.க. எந்த ஒரு மேயர் பதவியிலோ, நகராட்சித் தலைவர் பதவியிலோ, பேரூராட்சித் தலைவர் பதவியிலோ வெற்றி பெற முடியாது என்பதையும், மக்கள் அ.தி.மு.க.,வை அடியோடு நிராகரிப்பார்கள், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி விடுவார்கள் என்பதையும் புரிந்துகொண்டு விட்டார். தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் படுதோல்வியை ஒப்புக் கொண்டு விட்டதைத்தான், இந்த மறைமுகத் தேர்தலுக்கான அவசரச்சட்டம் எதிரொலிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, மேயர்கள் நேரடியாகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கும், இன்று மறைமுகத் தேர்தல் என வெளிவந்துள்ள அவசரச்சட்டத்திற்கும் என்னே வேறுபாடு! திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, மக்களின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. உள்ளாட்சிகளுக்கு மறைமுகத் தேர்தலோ, அல்லது நேரடித் தேர்தலோ- எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலை சட்ட ரீதியாக செயல்பட்டு தடுத்து நிறுத்துவதில் திமுக தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. நவம்பர் 20 ஆம் தேதி மின்னம்பலத்தில், உள்ளாட்சித் தேர்தலைத் தடுத்து நிறுத்த புது மூவ் என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணைப் பகுதியில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

“உச்ச நீதிமன்றம் வகுத்துக்கொடுத்த நெறிமுறைகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இதுவரை பின்பற்றவில்லை. வார்டு வரையறையில், பெண்கள் ஒதுக்கீட்டில் ஏகப்பட்ட முரண்பாடுகள் நிலவுகின்றன. புதிதாகத் தொடங்கப்பட்ட மாவட்டங்களின் வரையறையும் அவசர அவசரமாகச் செய்யப்படுகிறது. எல்லாமே ஆளுங்கட்சிக்கு ஆதரவான முறையிலேயே செய்யப்படுகின்றன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் இப்போதைய வரையறைகளின்படி நடத்தக் கூடாது என ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக உறுப்பினர் அல்லாத இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மூலமாக, மாவட்ட கலெக்டர், டிலிமிடேஷன் அலுவலர், மாநிலத் தேர்தல் ஆணையர், மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் உள்ளிட்ட ஏழு அதிகாரிகளுக்கு புகார் அனுப்ப வேண்டும்.

மனுக்கள் அனுப்பப்பட்டு அதன் நகலும், ஒப்புகைச் சீட்டுகளும் சேகரிக்கப்பட்டு திமுகவின் முக்கிய வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. அவர் மூலம் இன்னொரு வழக்கறிஞருக்கு கை மாற்றப்படும். அனைத்து மனுக்களையும் தொகுத்து உள்ளாட்சித் தேர்தலை தற்போதைய நிலையில் நடத்தக் கூடாது என்று வாக்காளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும். இதில் ஆர்.எஸ்.பாரதியோ, திமுக தொடர்பான வேறு யாருமே இருக்க மாட்டார்கள். இதற்கான பணிகள் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டு விட்டன’ என்று அந்தச் செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

அதிகாரிகள் வட்டாரத்தில் மின்னம்பலத்தின் தேடுதலில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்ட வரையறைகள் உட்பட, பெண்கள் ஒதுக்கீடு போன்ற காரணங்களை ஒட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் புகார் மனு நமக்குக் கிடைத்தது. இப்படி அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை என்பது சாத்தியமில்லை என்பதே எதார்த்தம். அதையே அடிப்படையாக வைத்து புகார் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை என்று நீதிமன்றம் செல்வதுதான் திமுகவின் திட்டம்.

தேர்தலை தடுத்து நிறுத்த திமுக மேற்கொள்ளும் இந்த சட்ட ரீதியான திட்டம் பற்றி திமுக வட்டாரத்தில் சிலரிடம் கேட்டபோது,

“உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மட்டுமல்ல, வாக்குப் பதிவுக்கு முன்னதான வரையறைகளில் இருந்து எதுவுமே சரியாக இல்லை என்று எல்லாருக்கும் தெரியும். இந்நிலையில் அதிமுக ஆளுங்கட்சி என்ற நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை வெற்றிபெற்றதாக அறிவித்துக் கொள்ளும். அப்புறம் ஊருக்கு ஊர் கூவத்தூராகி எம்.எல்.ஏ.க்களை போல கவுன்சிலர்கள் அடைத்து வைக்கப்பட்டு விலை பேசப்படுவார்கள். இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் தலைமைப் பதவிகளை அதிமுக கைப்பற்றிவிடும்.

இப்படி நடந்தால் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி என்ற அதிகார பலம் மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் சேர்ந்தே செல்வாக்கு செலுத்துவார்கள். அதையும் மீறி பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் அதிமுக நிர்வாகிகளே பதவியில் இருப்பார்கள். இப்போது தேர்தல் நடந்தால் அடுத்து 2024 வரையிலும் அதிமுகவினர்தான் பதவியில் இருப்பார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், ஆட்சிக்கு வந்தாலும் திமுகவால் தனது நிர்வாகிகளுக்கு எதுவும் செய்யமுடியாது. எனவே திமுகவின் குறிக்கோள் என்பது முறைகேடாக நடக்கக்கூடிய இந்த உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்தி சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதே” என்கிறார்கள்.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon