மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

மறைமுகத் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மறைமுகத் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஒப்புதல் அளித்துள்ளார். மறைமுகத் தேர்தலுக்கு தமிழக அரசு அளித்த விளக்கத்தில், “மேயரும், பெரும்பாலான கவுன்சிலர்களும் வேறு வேறு கட்சியாக இருப்பதால் நிர்வாகம் பாதிக்கப்படுகிறது.சில சமயங்களில் மாநகர, நகர மன்றக் கூட்டங்களைக் கூட்டுவதே சிக்கலாகி விடுகிறது. மறைமுகத் தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும்” என்று தெரிவித்தது.

ஆனால், இது முறைகேடான தேர்தலுக்கு வழிவகுக்கும் எனவும், ஜனநாயக விரோத செயல் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

நீதிமன்றத்தில் முறையீடு

இந்த நிலையில் மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (நவம்பர் 21) முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியவுடன் நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு ஆஜரான வழக்கறிஞர் நீலமேகம், “மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடித் தேர்தலுக்கு பதிலாக மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்ததோடு அதற்காக அவசர சட்டமும் பிறப்பித்துள்ளது. இது ஜனநாயக விரோத செயல். எனவே, அவசரச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். இதனை அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மனுதாக்கல் செய்வதற்காக பணிகளை நீலமேகம் மேற்கொண்டுள்ளார். மனு இன்றைக்குள் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon