மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

காதல் விவகாரம்: மகளை எரித்த தாய்!

காதல் விவகாரம்: மகளை எரித்த தாய்!வெற்றிநடை போடும் தமிழகம்

காதலை கை விட மறுத்ததால் பெற்ற தாயே தனது மகளைத் தீயிட்டு எரித்து கொன்ற சம்பவம் நாகப்பட்டினத்தில் நிகழ்ந்துள்ளது.

திட்டச்சேரி அடுத்த வாழ் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் - உமா மகேஸ்வரி தம்பதியினரின் மகள் ஜனனி(17). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜனனியின் தாய் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதோடு மகளைக் கண்டித்துள்ளார். எனினும் ஜனனி காதலைக் கைவிட மறுத்துள்ளார்.

இந்நிலையில் ஜனனியை அழைத்துச் சென்று தனது உறவினர் வீட்டில் ராஜ்குமார் தங்க வைத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, ஜனனியின் பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் காவல்துறையினரின் அறிவுரையைத் தொடர்ந்து ஜனனி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மகளிடம் உமா மகேஸ்வரி காதல் விவகாரம் குறித்துக் கேட்டுக் கண்டித்துள்ளார். அப்போதும் தாய் பேச்சை கேட்காமல் எதிர்த்துப் பேசியதால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி மண்ணெணையை எடுத்து மகள் மீது ஊற்றி தீ வைத்து விட்டு, தானும் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தீயினால் உடல் கருகி இருவரும் அலறியதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஜனனி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். அவரது தாயும் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராஜ்குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான், இந்த காதலுக்குப் பெண் வீட்டில் மறுப்புத் தெரிவித்ததாக ராஜ்குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon