மேலவளவு படுகொலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
1996ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது முருகேசன் உள்ளிட்ட 7 பேரை வழிமறித்து ஒரு கும்பல் படுகொலை செய்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டு தண்டனை அனுபவித்த வந்த 13 பேர், எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு விசிக உள்ளிட்ட பட்டியலின அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் 13 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ரத்தினம் மனுதாக்கல் செய்தார்.
இவ்வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது, 13 பேரின் விடுதலை அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறித்து ஆவணங்களுடன் பதிலளிக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதி சிவஞானம், தாரிணி அமர்வு முன்பு இன்று (நவம்பர் 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். சமூகத்தில் இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுசெய்துதான் முடிவெடுக்கப்பட்டதா?” என்று சராமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான 13 பேரையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டுள்ளனர்.