மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் 2 தமிழர்களா?

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் 2 தமிழர்களா?

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘மெரினா புரட்சி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ராஜ் படம் குறித்த தன் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் இறுதிநாளில் வன்முறைக் கும்பல் உள் நுழைந்ததாகக் கூறி காவல்துறையினர் தடிஅடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.

இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எம்.எஸ்.ராஜ் மெரினா புரட்சி என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். பெரும் போராட்டத்திற்குப் பிறகே இப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியது. டிரெய்லரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முகநூலில் வெளியிட்டார். விஜய் சேதுபதி, சூரி மற்றும் சமுத்திரக்கனி டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

மெரினா புரட்சி டிரெய்லரை பார்க்கும் போது, போராட்டம் எவ்வாறு தொடங்கியது, அதன் பின்னணியில் இருந்தது யார் என்று புலனாய்வு செய்யும் விதமாக இப்படம் இருக்கும் எனத் தெரிகிறது. டிரெய்லரில் இடம்பெறும் வசனங்களைப் பார்க்கும் போது, போராட்டம் குறித்த முக்கியமான கேள்விகளை மெரினா புரட்சி முன்வைக்கிறது. ‘ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இரண்டு தமிழர்கள்’ என்ற வசனம் கவனம் வைக்கிறது.

மெரினா புரட்சி படம் குறித்து இயக்குநர் எம்.எஸ்.ராஜ் மின்னம்பலத்திற்கு அளித்த பேட்டியில், “அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், டென்மார்க், நார்வே, ஆஸ்திரேலியா, தென் கொரியா என 13 நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் மெரினா புரட்சி திரையிடப்பட்டது. நார்வேயில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. படம் பார்த்த அனைவரும் மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசினார்கள். அது படத்திற்கு மிகப் பெரும் கவனத்தைப் பெற்றுத் தந்தது. தென் கொரியாவில் நடைபெற்ற விழாவில் சிறந்த படைப்பாளிக்கான விருதும் கிடைத்தது” என்றார்.

முதன் முறையாக தென் கொரியாவில் சிறப்புக் காட்சிக்காக திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் மெரினா புரட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. டிரெய்லரில் இடம்பெற்ற ‘ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இரண்டு தமிழர்களா’ என்ற வசனம் குறித்து கேட்டபோது, இயக்குநர் எம்.எஸ்.ராஜ், “அனைத்திற்குமான பதில் படத்தில் இருக்கும்”எனக் கூறினார். மேலும், படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் மட்டும் வசனத்தை டிரெய்லரில் இணைக்கவில்லை எனக் கூறுகிறார் மெரினா புரட்சி இயக்குநர்.

“தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூன்றாம் ஆண்டை நோக்கி நகர்கிறோம். ஆனால், இன்னமும் நம் போராட்டம் பல்வேறு வடிவங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு, தற்போது ஐஐடியில் நிகழ்ந்துள்ள மாணவி தற்கொலை என தொடர்ந்து தமிழர்களை கொதிநிலையிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழர்களின் ஒற்றுமையும், போராட்ட குணமும் தொடர்ந்து நம்மை நடைபோட வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் ஏற்படுத்திய எழுச்சி, படம் பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் ஏற்படும்” என நம்பிக்கையோடு மக்கள் கருத்துக்காக காத்திருக்கிறார் எம்.எஸ்.ராஜ்.

நவம்பர் 29ஆம் தேதி மெரினா புரட்சி திரைக்கு வரவிருக்கிறது.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon