புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை விமரிசித்துப் பேசியதற்காக திருமயம் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.
நவம்பர் 18 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடந்த கூட்டுறவு வார விழாவுக்குப் பின் பேசிய ரகுபதி, “புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் மூவர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். மூவர் திமுகவைச் சேர்ந்தவர்கள். ஆனால் அரசு விழாக்களில் எல்லாம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பெயர்தான் இருக்கிறது. திமுக எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை போடுவதில்லை. இம்மாவட்டத்தின் கலெக்டர் உமாமகேஸ்வரி, அதிமுகவின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் போல செயல்படுகிறார். கூட்டுறவு துணைப் பதிவாளர் தீபாவோ ஒன்றிய மகளிரணிச் செயலாளர் போல செயல்படுகிறார்” என்று பேசியிருக்கிறார்.
இந்தத் தகவல் நேற்று முதல் மாவட்ட அதிகாரிகளிடையே பரவியது. இந்நிலையில் ஷேக் திவான் என்பவர் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளை ரகுபதி தரக்குறைவாகப் பேசியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் அரசு அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு 504, 506 (1), 294 பி, 67 பிரிவுகளில் ரகுபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவோமோ என்ற சந்தேகத்தில் ரகுபதி முன் ஜாமீன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்