மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

என்னிடம் 1,000 ஏக்கரா? திமுகவுக்கு ராமதாஸ் பதில்!

என்னிடம் 1,000 ஏக்கரா? திமுகவுக்கு ராமதாஸ் பதில்!

முரசொலி நில விவகாரம் தொடர்பான விசாரணைக்கு திமுக ஆஜரானது குறித்து ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட, அதற்கு பட்டாவுடன் ஸ்டாலின் பதிலளிக்க இதுதொடர்பாக இரு கட்சியினருக்கும் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார்.

இதுதொடர்பான விசாரணை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 19) தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் முன்பு நடைபெற்றது. அதில், முரசொலி நிர்வாகம் சார்பாக ஆஜரான அதன் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, ‘இந்த விவகாரத்தை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை’ எனத் தெரிவித்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து, “முரசொலி தொடர்பான புகார் அளித்தவர்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. பொய்யாக வழக்கு தொடுத்தவர் மீது நாளை அவதூறு வழக்கு தொடரவுள்ளோம். இதை முதன்முதலில் ஆரம்பித்துவைத்த மருத்துவரின் நிலம் 1000 ஏக்கர் குறித்தும் தெரிவிப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தைக் காட்டுங்கள். அதுதான் அறம். அதுதான் நேர்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாகக் கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தைக் கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்” என்றும் சவால் விடுத்துள்ளார்.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon