மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

பாட்டு பாடிய பொன்முடி: ஆச்சரியத்தில் தொண்டர்கள்!

பாட்டு பாடிய பொன்முடி: ஆச்சரியத்தில் தொண்டர்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி மீது தொண்டர்கள் கடுமையாக அதிருப்தியில் இருப்பதாகவும், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் திமுக அடைந்த படுதோல்விக்குக் கட்சியினரை பொன்முடி அணுகும் விதமும் ஒரு காரணம் என்றும் திமுக தொண்டர்களே வெளிப்படையாக குற்றம்சாட்டி வந்தனர். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் தோல்வியானது திமுக தலைமைக்கே சற்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே கடந்த 10ஆம் தேதி நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “கட்சி வளர்ச்சிக்காக நாளடைவில் சர்வாதிகாரியாக மாறுவேன். தவறு செய்யும் நிர்வாகிகள் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். நம்மைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பொன்முடியின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் தெரிவதாகத் தெரிவித்துள்ளனர் விழுப்புரம் மாவட்டத் திமுகவினர்.

“அரசு மற்றும் தனியார் ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை மற்றும் நிலுவையை உடனடியாக வழங்க கோரி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக விவசாய அணி மற்றும் விவசாயத் தொழிலாளர் அணி சார்பில் கடந்த 18ஆம் தேதி விழுப்புரத்தில் இரண்டு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. விக்கிரவாண்டியில் நடந்த போராட்டத்தில் பொன்முடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் எம்.ஜி.ஆர் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.

திருமண மண்டபத்தில் தொண்டர்கள் அனைவருடனும் சரிசமமாக அமர்ந்து, ஜாலியாகப் பேசிய பொன்முடி, பாட்டு பாடியும் தொண்டர்களை குஷிப்படுத்தியுள்ளார். விக்கிரவாண்டி தேர்தலுக்குப் பிறகு பொன்முடியின் அணுகுமுறையும் செயல்பாடுகள் அனைத்தும் புதுவிதமாக இருப்பது ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகிறது” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon