மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

ஒரு பெண்ணால் ஆதித்யா வர்மாவை எப்படி காதலிக்க முடியும்: பனிதா

ஒரு பெண்ணால் ஆதித்யா வர்மாவை எப்படி காதலிக்க முடியும்: பனிதா

“ ‘கபீர் சிங்’கில் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆதித்யா வர்மாவின் மோசமான நடத்தையை மகிமைப்படுத்த மாட்டேன்” என்று ஆதித்யா வர்மா படத்தின் நாயகி பனிதா சந்து கூறுகிறார்.

ஷாகித் கபூர் நடித்த கபீர் சிங் (அர்ஜுன் ரெட்டி ரீமேக்) படத்தின் மீதான விமர்சனம் படம் வெளியான நாட்களிலிருந்து நீடித்து வருகிறது. ஆணாதிக்க மனோநிலையிலும், பெண்கள் மீதான வன்முறையைத் தூண்டும் வகையிலும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக கபீர் சிங் படத்தைப் பல பெண்ணிய அமைப்புகள் எதிர்த்தன. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறிய கபீர் சிங், சாமானிய ரசிகன் மீது சினிமா கதாபாத்திரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து தொடர்ந்து விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

அர்ஜுன் ரெட்டி வெளியான நேரம், அந்தப் படம் சென்சேஷன் ஹிட் ஆனாலும், இதேபோன்ற விமர்சனங்களையும் சந்தித்தன.

அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்தான் துருவ் விக்ரமின் ‘ஆதித்யா வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்தப் படம். ‘அக்டோபர்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பனிதா சந்து இதில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து ஆங்கில ஊடகங்களில் பேட்டியளித்த பனிதா சந்து, வழக்கமாக நாயகிகள்தான் நடித்த படத்தைக் கொண்டாடுவது போல் இல்லாமல், படத்தின் மீதும், நாயகன் கதாபாத்திரம் மீதும் தான் கொண்டுள்ள சுய பார்வையை வெளிப்படையாகக் கூறி ஆச்சர்யப்பட வைக்கிறார்.

சில வாரங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில்கூட, “நான் ‘அர்ஜுன் ரெட்டி/கபீர் சிங் கதாபாத்திரம் சரியானது’ என்று சொல்லப்போவதில்லை. அதில் சிக்கல்கள் உள்ளன. நான் ஆதித்யா வர்மா தொடங்குவதற்கு முன்பே இயக்குநர் குழுவுடன் உரையாடல் நிகழ்த்தினேன். அர்ஜுன் ரெட்டி படத்தைப் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட சிக்கல்களை அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதை புரிந்து கொண்டார்கள்” எனக் கூறினார்.

சமீபத்தில் பனிதா அளித்த பேட்டியில், ‘ஆதித்யா மற்றும் மீரா’ உறவு நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த பனிதா, “எல்லோருக்குமாக என்னால் பொதுவாகப் பேசவோ, பொதுமைப்படுத்தவோ முடியாது. ஆனால், அது என் வாழ்க்கையில் நான் விரும்பும் உறவு இது அல்ல என்பதை மட்டும் நான் அறிவேன்.

ஆதித்யா வர்மா மோசமானவன், குறைகள் இருப்பவன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற காதல் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

சினிமா என்பது இது போன்ற கதைகளைச் சொல்லத்தான். ஆனால், அதைச் சித்தரிப்பதற்கும் மகிமைப்படுத்துவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. இதில் நாங்கள் இரண்டாவது அம்சத்தைச் செய்யவில்லை.

நான் ஆதித்யா வர்மா டிரெய்லரைப் பார்த்த வரை, நாங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறோம் என நம்புகிறேன். நாயகனின் கோபத்தாலும், நடத்தையாலும் வரும் வலி, வேதனையைக் காட்டியிருக்கிறோமே தவிர, இதோ பாருங்கள், கோபமான இளைஞர் பைக் ஓட்டிச் செல்கிறான் என்பது போலக் காட்டவில்லை” எனக் கூறினார்.

மேலும் மீரா கதாபாத்திரத்தில் நடித்தது தனக்கு மிகச் சவாலாகவும், வித்தியாசமாகவும் இருந்ததெனவும் கூறுகிறார் இந்த பாலிவுட் நாயகி. ஆதித்யா வர்மா 22ஆம் தேதி வெளியாகிறது.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon