மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

உலகின் முதல் கருத்தடை ஊசி: இந்தியாவில் கண்டுபிடிப்பு!

உலகின் முதல் கருத்தடை ஊசி: இந்தியாவில் கண்டுபிடிப்பு!

உலகிலேயே முதன்முறையாக இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆண்களுக்கான கருத்தடை ஊசிகளைக் கண்டுபிடித்து அதை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. தற்போது அதை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதலுக்காக ஆராய்ச்சியாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தக் கருத்தடை ஊசியின் பலன் 13 ஆண்டுகளுக்கு இருக்கும், அதன் பிறகு அது அதன் திறனை இழக்கிறது. இது அறுவை சிகிச்சை வாசக்டமிக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.ஷர்மா, இந்தக் கருத்தடை ஊசிக்கான ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “இதற்கான சோதனைகள் முடிந்துவிட்டன. மூன்று கட்டங்களாக 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 97.3 சதவிகித வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஊசியால் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று இந்த சோதனையை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தயாரிப்பை உலகின் முதல் ஆண் கருத்தடை என்று பாதுகாப்பாக அழைக்கலாம்” என்று கூறியுள்ளார்.

ஐசிஎம்ஆர் என்பது மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியாவின் உச்ச அமைப்பாகும். இதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மருத்துவ ஆராய்ச்சித் துறை மூலம் மத்திய அரசு நிதியளிக்கிறது. ஆண்களுக்கான கருத்தடை ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தாலும், பக்க விளைவுகள் காரணமாக அது ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, அங்கு உருவாக்கப்பட்ட கருத்தடை ஊசியால் முகப்பரு மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதால் அந்த சோதனை 2016இல் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், 53.5 சதவிகித தம்பதிகள் கருத்தடை அல்லது இடைவெளி முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 4 (2015-16)இன் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஆண்களுக்கான கருத்தடை ஊசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon