மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

தனித்து நிற்கத் தயார்- எடப்பாடி மைண்ட் வாய்ஸை எதிரொலித்த அமைச்சர்

தனித்து நிற்கத் தயார்- எடப்பாடி மைண்ட் வாய்ஸை எதிரொலித்த அமைச்சர்வெற்றிநடை போடும் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைண்ட் வாய்சை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எதிரொலித்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் எப்போது வரும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், நேற்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் வகையில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல் தாங்காமலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவெடுத்திருக்கிறார் என்று மின்னம்பலத்தின் இன்றைய மதியப் பதிப்பில், உள்ளாட்சித் தேர்தல்: கேபினட்டில் நடந்தது என்ன? என்ற தலைப்பிட்ட செய்தியில் வெளியிட்டிருந்தோம்.

அதில், “அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் பேசிய முதல்வரின் பேச்சு வேறு மாதிரி இருந்திருக்கிறது. ‘கூட்டணிக் கட்சிகளை அட்ஜஸ்ட் பண்ணி உள்ள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா ஒவ்வொருத்தரும் கேட்குறதப் பார்த்தா நமக்கே நாப்பது பர்சண்ட் இடம்தான் போட்டியிடவே கிடைக்கும்போலிருக்கு. கட்சியில இருக்கிற அடிமட்ட நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்குறதுக்குதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்துறோம். ஆனா, நம்ம கட்சிக்காரங்களுக்கு அதிக பலன் இல்லைன்னா, இப்ப எப்படி நடத்த முடியும்? நம்ம உழைப்பையும், பணத்தையும் செலவழிச்சு கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைச்சு அப்புறம் பொதுத் தேர்தலுக்குள்ள வேற முடிவு எடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது?’ என்று கேட்டிருக்கிறார் முதல்வர்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

மின்னம்பலம் செய்தி வெளிவந்த அதேநேரம் இன்று (நவம்பர் 20) விருதுநகர் மாவட்டம் புலவக்கல் அணையில் நீர் திறந்துவிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,

“யாருக்கு பலம், யாருக்கு வக்கிருக்கு, வகையிருக்குனு பார்த்துடுவோம். எல்லா கட்சிக்கும்தான் சொல்றேன். அண்ணா திமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி, தேமுதிக, திருமாவளவன், புதிய தமிழகம்னு எல்லா கட்சியையும் தான் சொல்றேன். எல்லா கட்சியும் தனித்தனியா நின்னு அவனவன் பலத்தைக் காட்டிக்கிட்டு சட்டமன்றத்துல கூட்டு சேர்ந்துடுவோம்.

இப்ப யாருக்கு பலம் இருக்கு, யார் சேர்மன பிடிக்கிறான்னு பாத்துடுவோம். ஏன்னா, என்னைய வச்சிதான் இந்த ஆட்சி இருக்கு, என்னைய வச்சிதான் எம்.பியில ஜெயிச்சாங்க, என்னைய வச்சிதான் எம்.எல்.ஏ.ல ஜெயிச்சாங்கனு சொல்ற இந்த பிரச்சினைக்கெல்லாம் இடமில்லாம போயிடுமில்ல? இந்த என் கருத்தை பொதுக்கருத்தா நினைச்சு எல்லாரும் தனிச்சு நிப்போம். நாங்க தயாரா இருக்கோம்” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தப்பட்டு தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் வருத்தப்பட்டதாக மின்னம்பலம் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். அந்த அமைச்சர்களில் ராஜேந்திரபாலாஜியும் ஒருவர். இதன் பிறகுதான் இன்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில் முதல்வரின் எண்ண ஓட்டத்தை வெளிப்படையாக தன் பாணியில் போட்டு உடைத்திருக்கிறார்.

ராஜேந்திரபாலாஜி பல நேரங்களில் பேசி சர்ச்சையை உண்டாக்கி முதல்வருக்கு தர்ம சங்கடத்தைக் கொடுத்தாலும் இந்த முறை அவர் கொடுத்த பேட்டி முதல்வருக்கு மன நிறைவை உண்டாக்கியிருக்கிறது.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon