மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

குருவாயூர் போல சபரிமலைக்கும் தனிச்சட்டம்: உச்ச நீதிமன்றம்!

குருவாயூர் போல சபரிமலைக்கும் தனிச்சட்டம்: உச்ச நீதிமன்றம்!

குருவாயூர் போல சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்த மீளாய்வு மனு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அப்போது பழைய தீர்ப்பும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில், தற்போது கார்த்திகை மகர பூஜையை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை செல்ல முன்பதிவு செய்திருக்கின்றனர். எனினும் பெண்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். நேற்று புதுச்சேரியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 20) சபரிமலை தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி கேட்டிருந்தோம். ஆனால், மாநில அரசு, திருவாங்கூர்-கொச்சி இந்து மத அமைப்புகள் சட்டத்தைத் திருத்தியது தொடர்பான ஆவணங்களை மட்டுமே தாக்கல் செய்துள்ளது. இதனை ஏற்க முடியாது.

கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கோயில் நிர்வாகத்துக்கும், பக்தர்கள் வழிபாட்டுக்கும் தனிச்சட்டம் இருப்பது போல சபரிமலை கோயிலுக்கும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு 4 வாரக் கால அவகாசத்தை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

இந்த தனிச் சட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை வரும் ஜனவரி 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

வருவாய் அதிகரிப்பு

கடந்த சனிக்கிழமை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நடை திறக்கப்பட்ட நாளன்று 50 சதவிகித வருவாய் அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ரூ.2.04 கோடி வருவாய் வசூலான நிலையில், இந்த நாள் முதல் நாளன்று மட்டும் ரூ.3.30 கோடி வசூலாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தலைவர் வாசு, 40,000 பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon