மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

இலங்கை: அண்ணன் பிரதமர்-தம்பி அதிபர்

இலங்கை: அண்ணன் பிரதமர்-தம்பி அதிபர்

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷே பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்‌ஷே பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் நேற்று முன்தினம் அதிபராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, கோத்தபயவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியா வருமாறு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்ற கோத்தபய வரும் 29ஆம் தேதி இந்தியாவிற்கு வரவுள்ளார்.

இதுதொடர்பாக ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை அதிபருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பான பிரதமரின் செய்தியை அவருக்குத் தெரிவித்தேன். கோத்தபய தலைமையிலான ஆட்சியில் இந்தியா-இலங்கை இடையிலான உறவு புதிய உச்சத்தைத் தொடும். மேலும் இந்தியா வரவேண்டும் என்கிற பிரதமரின் அழைப்பை கோத்தபய ஏற்றுக்கொண்டார். வரும் 29ஆம் தேதி அவர் இந்தியா வரவுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

ஆனால், கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு தமிழக தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் இன்று (நவம்பர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்றைய ராணுவ ஆலோசகராக இருந்த கோத்தபய ராஜபக்‌ஷே தான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என அவர் மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவின் அழைப்பு ஈழத்தமிழர்களை மட்டுமன்றி இன்றைய தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக தெரிவித்த திருமாவளவன், “கோத்தபய ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது வெளிப்படை. தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரனில் ராஜினாமா

கோத்தபய ராஜபக்‌ஷே அதிபராக பொறுப்பேற்ற நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்‌ஷே, ‘மக்கள் தீர்ப்பை மதித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவியிலிருந்து விலக வேண்டும். அதிபரும், அமைச்சரவையும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ எனக் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காபந்து அரசு அமைக்க கோத்தபய ராஜபக்‌ஷே திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி காபந்து பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷே பதவியேற்கவுள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மகிந்த ராஜபக்‌ஷேவுடன் 15 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனவும், இந்த காபந்து அரசு 2020 மார்ச் மாதம் வரை பதவியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon