மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

கலைஞர் சிலைக்கு தடை போட வைத்த சிலை!

கலைஞர் சிலைக்கு தடை போட வைத்த சிலை!

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வரான நாராயணசாமி ஏற்கனவே அறிவித்து இது தொடர்பாக சிலை அமைப்புக் குழு ஒன்றையும் அமைத்திருந்தார்.

புதுவை மாநில முதல்வரோடு பல விஷயங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, இந்த சிலை விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மறைந்த முதல்வர்களான கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் புதுச்சேரியில் சிலை அமைக்க வேண்டுமென்று திமுகவினரும், அதிமுகவினரும் காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதில் திமுகவினரின் கோரிக்கையை ஏற்று கலைஞர் சிலை வைக்க ஏற்பாடுகளைச் செய்தார் நாராயணசாமி. இதுகுறித்து சட்டப்பேரவையிலும் அறிவித்திருக்கிறார் முதல்வர்.

இந்தப் பின்னணியில் செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, “ 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பொது இடங்களில் சிலை அமைக்க தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை தலைமைச் செயலா் உள்ளிட்ட செயலா்கள் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடா்பாக புகார் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

இதன் பின்னணி பற்றி புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது,

“கடந்த நவம்பர் 17 ஆம் தேதி புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாம் பகுதியில் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவின் தந்தையார் மல்லாடி சூரியநாராயண ராவின் சிலையை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார். அடுத்த சில மணி நேரங்களில் இதுகுறித்து கிரண்பேடிக்கு இந்த சிலை முறையான அனுமதி பெற்று திறக்கப்படவில்லை என்று புகார் சென்றது. உடனடியாக இதுபற்றி ஏனாம் பகுதியை உள்ளடக்கிய புதுச்சேரி கலெக்டர் அருணிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் துணை நிலை ஆளுநர். ‘ஏனாம் பகுதியில் எத்தனை சிலைகள் இருக்கின்றன? பொது இடத்தில் எத்தனை சிலைகள்? தனியார் இடத்தில் எத்தனை சிலைகள்? அனுமதி பெற்று வைக்கப்பட்ட சிலைகள் எத்தனை? அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகள் எத்தனை போன்ற விவரங்களை கலெக்டரிடம் இருந்து பெற்றிருக்கிறார் கிரண்பேடி. இதற்குப் பிறகுதான் சிலை வைக்கப்படுவது பற்றிய புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் கிரண்பேடி” என்கிறார்கள்.

துணை நிலை ஆளுநரின் இந்த கருத்துக்கு பதில் கொடுத்துள்ள முதல்வர் நாராயணசாமி, “கலைஞர் சிலை வைப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்தாலும் உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வைப்போம்” என்று கூறியுள்ளார்.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon