மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

காவல்நிலையம் முன்பு குடும்பமே தீக்குளிக்க முயற்சி!

காவல்நிலையம் முன்பு குடும்பமே தீக்குளிக்க முயற்சி!

கிருஷ்ணகிரியில், நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் காவல்நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வேலாவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். அண்ணன், தம்பிகளோடு வசித்து வரும் இவரது கூட்டுக் குடும்பத்தில் 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர். முருகேசன், தனக்குச் சொந்தமான மூன்று செண்ட் நிலத்தை அண்டை வீட்டுக்காரரான அருணாசலம், கேசவன் ஆகியோர் ஆக்கிரமித்துவிட்டதாக மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் காவல் துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அருணாசலமும், கேசவனும் அந்த ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிடம் கட்ட ஆட்களை அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பழனிவேலிடம் முருகேசன் புகார் அளித்துள்ளார்.

அப்போதும் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று தனது குடும்பத்துடன் வந்து காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார் முருகேசன். 2 பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் தாங்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளனர்.

அதனைக் கண்டு ஓடிவந்த காவல்துறையினர், அவர்கள் அனைவரின் மீதும் தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இத்தனை பேர் தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon