மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

சொத்து வரிக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை : அமைச்சர்!

சொத்து வரிக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை : அமைச்சர்!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்திவைக்கப்படுவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு, சென்னை உட்பட அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 100 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்ட வரி விதிப்பில் முரண்பாடுகள் இருந்ததாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (நவம்பர் 19)செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ”சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் 2018 ஏப்ரல் 4 முதல் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. வாடகை அல்லாத சொந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவிகிதம் மிகாமலும், வாடகைக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு 100 சதவிகிதம் மிகாமலும், பிற வகைகட்டிடங்களுக்கு 100 சதவிகிதம் மிகாமலும், சொத்து வரி உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. பின்னர் அரசு 26.07.2018ல் வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்புகளுக்குச் சொத்து வரி 50 சதவிகிதத்திற்கு மிகாமல் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1.4.2018 முதல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும்சொத்து வரி சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விரிவாக்கம் செய்யப்பட்ட ஆறு மாநகராட்சிகள், 4 நகராட்சி பகுதிகள் ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகள், முந்தைய நகர்ப்புற அமைப்பில் உள்ளது போன்று திருத்தப்பட்ட மண்டல அமைப்பின் மதிப்பீட்டின் படி, உயர்த்தி சொத்து வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து சொத்து வரியைக் குறைக்கக் பல கோரிக்கை மனுக்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்தன. அதன் அடிப்படையில் முதல்வர் உத்தரவின் பேரில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை மறுபரிசீலனை செய்ய ஏதுவாக தற்போது ஒரு குழு அமைக்கப்படுகிறது.

அரசு நிதித் துறை முதன்மை செயலாளர் தலைமையில்,நகராட்சி நிர்வாக ஆணையர், உறுப்பினர், பேரூராட்சி இயக்குநர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அடங்கிய உறுப்பினர்களைக் கொண்டு குழு அமைக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழு மறு கணக்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப்பீட்டின் படி உயர்வு செய்யப்பட்ட சொத்து வரி அதிகமாக உள்ளதாக பல்வேறு குடியிருப்பார்கள் சங்கங்கள், வணிக சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதுவரை 15 மாநகாட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வுக்கு முன்னர், அதாவது 1.4.2018க்கு முன்பு செலுத்தி வந்த அதே சொத்துவரி செலுத்தினால் போதும்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உயர்த்தப்பட்ட விகிதத்தின்படி சொத்து வரி செலுத்தியவர்களுக்கு, கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரித்தொகையானது அடுத்தடுத்த அரை ஆண்டுகளில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.அப்போது, இந்த முடிவு என்பது நிர்வாக ரீதியிலானதா அல்லது உள்ளாட்சி தேர்தலுக்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அமைச்சர், பல்வேறு கோரிக்கைகள் வந்ததால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார்.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon