மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

நித்தியிடமிருந்து குழந்தைகளை மீட்கப் போராடும் பெற்றோர்!

நித்தியிடமிருந்து குழந்தைகளை மீட்கப் போராடும் பெற்றோர்!

தனது பேச்சுகளாலும், செயல்களாலும் சர்ச்சைகளுக்குப் புகழ்பெற்ற நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து தங்கள் மகள்களை மீட்டுத் தரக் கோரி தம்பதியர் குஜராத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனா சர்மா மற்றும் அவருடைய மனைவி தங்களது இரு மகள்களை மீட்டுத் தரக்கோரித் தாக்கல் செய்த மனுவில், பெங்களூருவில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் 7-15 வயதுடையோர்களாக இருக்கும்போது எங்களது நான்கு மகள்களைச் சேர்த்தோம். ஆனால், எங்களுக்குத் தெரிவிக்கப்படாமலேயே அகமதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள யோகினி சர்வகபீடம் என்ற நித்யானந்தா பீடத்தின் மற்றொரு கிளைக்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து எங்களுக்குத் தெரியவந்ததும் அங்கு மகள்களைக் காணச் சென்றோம். ஆனால் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து காவல் துறையினரின் உதவியுடன் சென்று இரு மகள்களை மீட்டு வந்தோம். ஆனால், லோபமுத்ரா ஜனார்த்தனா சர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகிய இரு மகள்களை அழைத்து வர முடியவில்லை. அவர்கள் வர மறுத்துவிட்டனர் என கூறுகின்றனர்.

எனவே நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள எங்கள் மகள்களை மீட்டுத் தர வேண்டும். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த ஆசிரமத்தில் உள்ள மற்ற குழந்தைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே இவர்கள் அளித்த புகாரின் பேரில் அகமதாபாத் போலீசார் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நித்யானந்தா மற்றும் மடத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட மூன்று பேர் மீது கடத்தல், மிரட்டல், சித்ரவதை, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அகமதாபாத் (கிராமப்புற) எஸ்பி ஆர்.வி.அசாரி தெரிவித்துள்ளார்.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon