மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

ராஜகோபால் மாற்றம்: ஆளுநர் நிம்மதி!

ராஜகோபால் மாற்றம்: ஆளுநர் நிம்மதி!வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியாவின் பதவிக்காலம் கடந்த மே மாதம் நிறைவடைந்தது. காலியாக இருந்த இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அறிவித்தது. மேலும் புதிய தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் பணிகளுக்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தேடுதல் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக இருந்த மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு சரியான நபரை பரிந்துரை செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில், தேர்வுக் குழுவின் உறுப்பினர்களான நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி தகவல் ஆணையர் தேர்வு கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின், அதுகுறித்து பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறைச் செயலாளருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

கூட்டத்திற்குப் பிறகு தலைமை தகவல் ஆணையருக்கான அரசின் பரிந்துரை கடிதத்தை எடுத்துக்கொண்டு அமைச்சர் ஜெயக்குமார், நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரிடம் அளித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று (நவம்பர் 19) தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த ராஜகோபால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது முடியும் வரை தலைமை தகவல் ஆணையராக பொறுப்பில் இருப்பார். ஆளுநரின் புதிய செயலாளராக ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தனது செயலாளராக இருக்கும் ராஜகோபாலை மாற்ற வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமித் ஷா வரை முறையிட்டிருந்தார் என நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்! என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “ராஜகோபால் ஐ.ஏ.எஸ் ஆளுநர் மாளிகையில் இருந்து தனி ராஜாங்கம் செய்துவருவதாகவும் ஒரு தகவல் அதிகார வட்டாரங்களில் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.சை மாற்றிவிட்டு தனக்கு ஏதுவான ஒரு அதிகாரியை நியமிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேரிலேயே சில முறை வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆளுநர். ஆனால் இதுவரைக்கும் ராஜகோபாலை ஆளுநராலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுதான் ராஜ்பவனுக்குள் நடக்கும் தற்போதைய அதிகார நிலவரம்” என்கிறார்கள் ராஜ்பவனில் நடப்பதை அறிந்தவர்கள்” என்றும் தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில்தான் தற்போது ஆளுநரின் செயலாளர் மாற்றப்பட்டு புதிய செயலாளராக இளம் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் ஆளுநர் மாளிகை வட்டாரங்களில்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon