மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

மகா ஒப்பந்தம்: 5 ஆண்டுகளுக்கு உத்தவ் தாக்கரே முதல்வர்?

மகா ஒப்பந்தம்: 5 ஆண்டுகளுக்கு உத்தவ் தாக்கரே முதல்வர்?வெற்றிநடை போடும் தமிழகம்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில், உத்தவ் தாக்கரே ஐந்து ஆண்டுகளுக்கு முதல்வர் என்றும், காங்கிரஸ்-என்சிபியை சேர்ந்தவர்கள் துணை முதல்வர் பதவியில் வகிப்பார்கள் என்றும் முடிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தும், மூன்று கட்சிகளால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புதிய கூட்டணி உருவாவது தொடர்பாக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) - சிவசேனா கட்சிகள் இடையே குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், சிவசேனாவுடனான கூட்டணி குறித்து நேற்று(நவம்பர் 18) டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் என்சிபி தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு முன் சரத் பவார், கூட்டணி குறித்த கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் குழப்பமான பதிலையே அளித்தாலும், சோனியா காந்தியுடனான பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி குறித்து தற்காலிக புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கம் உருவாகும் போது, இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள் - என்.சி.பி மற்றும் காங்கிரஸில் இருந்து தலா ஒருவர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முழு ஐந்தாண்டு காலத்திற்கும் முதலமைச்சராக இருப்பார் என்பதும் முடிவாகியுள்ளது. முன்னதாக என்.சி.பி. கோரியதாகக் கூறப்பட்டதைப் போல சுழற்சி முறையில் முதல்வர் பதவி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏற்பாட்டின் கீழ், புதிய சட்டமன்றத்தில் மூன்று கட்சிகளின் வலிமைக்கு ஏற்ப 42 இலாகாக்கள் பகிரப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. சிவசேனா 288 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 56 இடங்களைக் கொண்டுள்ளது, என்.சி.பி 54 இடங்களையும் மற்றும் காங்கிரஸ் 44 இடங்களையும் கொண்டுள்ளன.

சபாநாயகர் பதவி தொடர்பான முடிவுகளை காங்கிரஸ் மற்றும் என்சிபி எடுக்கவுள்ளது. சிவசேனா தரப்பில் இதற்கான ஒப்புதலும் பேச்சுவார்த்தையில் கிடைத்துள்ளது.

கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் அவசரம் காட்டவில்லை என காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் கூறியிருக்கிறார். மேலும், கருத்தியல் ரீதியாக சிவசேனா - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் மனக்கசப்பு வராமல் இருக்க கூட்டணி குறித்த முழுமையான புரிதலும் ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவை எட்டவேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon