மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

நாய்க்கு பதில் சிங்கம்: போராட்டத்தில் சுவாரசியம்!

நாய்க்கு பதில் சிங்கம்: போராட்டத்தில் சுவாரசியம்!

உலகமெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் உரிமைகள் மறுக்கப்படும்போது, விருப்பத்தகாத மாற்றங்கள் தங்கள் மீது திணிக்கப்படும் போதும் அதற்கு எதிராக போராட்டங்களில் இறங்குகின்றனர்.

அவ்வாறு போராட்டங்களில் இறங்கும் போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக புதுப்புது யுக்திகளையும் சிலர் கையாண்டு வருகின்றனர். ஆர்பாட்டக்காரர்களை அடக்க வரும் அதிகாரிகளை எப்படியேனும் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கின்றனர். அந்த விதத்தில் போராட்டக்களத்திற்கு ஒருவர் சிங்கத்தை அழைத்துவந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் மற்றும் வேலையின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் மாதம் முதல் ஈராக்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டக்காரர்களை பின்வாங்க வைக்கும் முயற்சியில் ஈராக் அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு இடையில் ஒரு சுவாரசியமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. போராட்டக்காரர்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் போலீஸ் நாய்களை அங்கு அழைத்து வந்துள்ளனர். அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் சிங்கம் ஒன்றை களத்திற்கு கொண்டு வந்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது. ஈராக் கொடியை உடலில் போர்த்தி ஒய்யாரமாக நடந்து வரும் அந்த சிங்கத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.

பசுமை மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ள, ஈராக் பாராளுமன்றம் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் செல்லும் முக்கியப் பகுதிகளை எதிர்ப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர்களை தடுப்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். இந்த பெரும் போராட்டத்தில் 325க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாகவும், 15000க்கும் அதிகமானோருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon