மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

ரீல் தலைவர் ரஜினி, ரியல் தலைவர் எடப்பாடி -நமது அம்மா பதில்!

ரீல் தலைவர் ரஜினி, ரியல் தலைவர் எடப்பாடி -நமது அம்மா பதில்!வெற்றிநடை போடும் தமிழகம்

எடப்பாடி பழனிசாமி முதல்வராவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவர் முதல்வர் ஆனது அதிசயம், அதில் தொடர்வது அதிசயம் என்று கமல்-60 விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘நாளையும் ஒரு அதிசயம் நடக்கும்’என்று பேசியிருந்தார்.

சில நாட்களுக்கு முன் தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது என்று குறிப்பிட்ட ரஜினிக்கு எடப்பாடியே, ‘ரஜினியெல்லாம் ஒரு தலைவரா? அவர் கேட்கிறார்னு நீங்களும் கேக்காதீங்க’என்று சேலத்தில் காட்டமாக பதில் கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் எடப்பாடியை ரஜினி சீண்டியபிறகு இன்று (நவம்பர் 19) வெளியான அதிமுகவின் அதிகாரபூர்வமான நாளிதழ் நமது அம்மாவில், ‘ரஜினி ரீல் தலைவர், எடப்பாடி ரியல் தலைவர்’ என்று குறிப்பிட்டு பதில் கட்டுரை வெளியாகியுள்ளது.

குத்தீட்டி என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரையில், “முதலமைச்சர் பதவி என்பது தான் எடுக்கும் சினிமாக்களில் முதல் சீனில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டிவிடுகிற கற்பனை நாற்காலி அல்ல என்பதை கமல்ஹாசனுக்கு ரஜினி சுட்டிக் காட்டியிருக்கும் மறைமுக அறிவுரையாகவே தோன்றுகிறது.

கூடவே, ‘தான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்பாடி கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் ‘ என்றும் சொல்லியிருக்கிறார் ரஜினி. உண்மைதான் கண்டக்ட்ராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்களும் கன்னித் தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனாலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கிக் கொள்பவர்கள்தான் தலைவர்களாக, அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம்பிடிக்கிறார்கள்.

அப்படித்தான் எடப்பாடியும் படிப்படியாய் உழைத்து தான் கொண்ட இயக்கத்தின் மீது குன்றாத விசுவாசத்தை பதித்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக, அதன் பிறகு இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து ஒரு தொண்டனாலும் தலைவராக முடியும், முதல்வராக முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்” என்று ரஜினிக்கு பதில் அளித்திருக்கும் நமது அம்மா கட்டுரை அடுத்த பத்திகளில் சூடான சொற்களை வீசியிருக்கிறது.

“ஒரு சினிமாவில் நடித்துவிட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிற வரலாறு இது.

எப்படியாயினும் மாற்றாரும் போற்றும் சாதனை சரித்திரத்தை கழகம் நாளையும் படைக்கும்.நீங்கள் சுட்டிக்காட்டுகிற அதிசயம் இதுதான்” என்று முடிகிறது அந்தக் குத்தீட்டிக் கட்டுரை.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon