மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

காலை இழந்த அனுராதாவுக்கு அரசு வேலை: அமைச்சர்

காலை இழந்த அனுராதாவுக்கு அரசு வேலை: அமைச்சர்

அதிமுக கொடிக்கம்ப விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் லாரியில் சிக்கி அனுராதா என்ற இளம்பெண் படுகாயமடைந்தார். இரு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் ராயல் கேர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட அனுராதாவின் இடது கால் முட்டிக்குக் கீழ் பகுதி அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனுராதாவின் குடும்பத்தினரை நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், சிகிச்சைக்கு நிதியுதவி அளித்து, அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் 48 மாற்றுத்திறனாளிகள் ஜோடிக்கு திருமண நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 18) நடைபெற்றது. இதில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சரோஜா, “கோவையில் கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் சிக்கி கால்களை இழந்த பெண்ணுக்கு அரசு சார்பில் சமூக நலத்துறை மூலம் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அவற்றை செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அந்தப் பெண்ணின் தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தகவல் தெரிவித்தார்.

மேலும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா எனப் பல்வேறு துறைகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சரோஜா கூறினார்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon