மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

சியாச்சின் பனிச்சரிவு: 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி!

சியாச்சின் பனிச்சரிவு: 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி!

லடாக்கில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் அமைந்துள்ள ராணுவப் பகுதியாக இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கரக்கோரம் பகுதியில் அமைந்துள்ள சியாச்சின் மலைப்பகுதி கருதப்படுகிறது. 20 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இப்பகுதியில், மிக அதிகமான குளிர்காற்றில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது அடிக்கடி நிலச்சரிவும் பனிச்சரிவும் ஏற்படும் பகுதியாகும். இந்நிலையில், நேற்று(நவம்பர் 18) மாலை 3 மணியளவில் 19,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 6 ராணுவ வீரர்கள் உட்பட எட்டு பேர் அடங்கிய குழு ஒன்று தாக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக பனிப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடும் திறன் பெற்ற மீட்புப் படையினர் வந்து பனிச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்டனர். இதில் பனிச்சரிவில் சிக்கிய 8 பேரும் படுகாயமடைந்திருந்தனர்.

உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 4 பேர் ராணுவ வீரர்கள் என்றும், 2 பேர் சுமை தூக்குபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் 6 பேரும் தீவிரமான தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு இது குறித்து தெரிவித்த ராணுவ அதிகாரி ஒருவர், “வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பனிச்சரிவு காரணமாக அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 18,000 முதல் 19,000 அடி உயரத்தில் சிக்கியிருந்தனர்” என்று தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் தன்னுடைய இரங்கலை இன்று காலை தெரிவித்தார். “சியாச்சினில் பனிச்சரிவு காரணமாக வீரர்கள் மற்றும் போர்டர்களின் மறைவால் ஆழ்ந்த வேதனை ஏற்பட்டுள்ளது. அவர்களின் தைரியத்திற்கும் சேவைக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களது குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon