மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 25 ஜன 2020

ஏர் இந்தியா விமான முறைகேடு வழக்கு: சிதம்பரத்திற்கு புதிய நெருக்கடி!

ஏர் இந்தியா விமான முறைகேடு வழக்கு: சிதம்பரத்திற்கு புதிய நெருக்கடி!

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தின் அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில், அவரை வேறொரு வழக்கில் கைது செய்யும் முயற்சிகளில் அமித் ஷா தரப்பு ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐயால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திகார் சிறையில் வைத்து அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். எனினும் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனையடுத்து ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 19) மேல்முறையீடு செய்தார் சிதம்பரம். புதிதாக பதவியேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம், ‘90 நாட்களாக சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். ஓரிரு நாட்களில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதியும் தெரிவித்துள்ளார். அப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சிதம்பரம் சிறையிலிருந்து வெளிவரமுடியாத படி அவரை வேறொரு வழக்கில் கைது செய்யும் முயற்சிகளில் அமித் ஷா தரப்பு ஈடுபட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தவிர சிதம்பரத்தின் மீது மற்றொரு வழக்கும் உள்ளது. அதாவது கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து 48 விமானங்களும், போயிங் நிறுவனத்திடமிருந்து 68 விமானங்களும் ரூ.70 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை மேற்கொண்டது. விமானம் வாங்க சிதம்பரம் தலைமையிலான மத்திய அமைச்சரவை குழுதான் ஒப்புதல் அளித்ததாக அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon