மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 25 ஜன 2020

அரசு மருத்துவர்கள் பழிவாங்கலா?

அரசு மருத்துவர்கள் பழிவாங்கலா?

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை தண்டிக்கும் விதமாக பணியிட மாறுதல் செய்யவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் கடந்த 25ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்குத் திரும்பாவிட்டால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் எச்சரித்திருந்தனர். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பணிக்குத் திரும்பிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ என சொல்லப்படும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசும், பணி மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டு வந்தன.இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் உட்பட 8 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நவம்பர் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்ட நிலையில் அவர்களை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை அரசு திரும்ப பெறவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு, அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் நிர்வாக ரீதியாகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் பணிமாறுதல் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை, சாந்தோமில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon