மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

சென்னை திரைப்பட விழா: தமிழக அரசு நிதியுதவி

சென்னை திரைப்பட விழா: தமிழக அரசு நிதியுதவி

17ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்காக தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் உலகத் திரைப்பட விழாவுக்கான சீஸன் என்றே கூறலாம். கோவா, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, தர்மசாலா, ஜெய்பூர் என நாட்டின் முக்கியமான நகரங்களில் உலக சினிமாவுக்கான திரைப்பட விழாக்கள் வருடந்தோறும் நடைபெறுகின்றன. அதில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவும் அடங்கும். கோவா, திருவனந்தபுரத்தைத் தொடர்ந்து இந்த விழா சென்னையில் நடைபெறும். சர்வதேச சினிமா, இந்திய சினிமா மட்டுமின்றி பிராந்திய சினிமாவுக்கும் இந்தத் திரைப்பட விழாக்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.

17ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிப்பது வழக்கம். இந்த நிலையில், இந்த வருடத்துக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (நவம்பர் 17) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான காசோலையினை இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.தங்கராஜ் அவர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், நடிகர்கள் மோகன், மனோபாலா, பூர்ணிமா பாக்யராஜ், லிசா பிரியதர்ஷன், சாக்‌ஷி அகர்வால் மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் ஆகியோர் உடன் இருந்தனர்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon