மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: டிடிவி தினகரன்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: டிடிவி தினகரன்வெற்றிநடை போடும் தமிழகம்

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அம்மா முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 13ஆம் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்து தினகரன் நடத்திய ஆலோசனை தொடர்பாக, உள்ளாட்சி: தினகரனுக்கு பச்சைக் கொடி காட்டிய சசிகலா என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் சந்திப்பில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வேட்பாளர்களை அமமுக சார்பில் நிறுத்தச் சொன்ன சசிகலா, தேர்தலுக்கான பட்ஜெட் குறித்த விவரங்களையும் கேட்டறிந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அமமுகவின் ஆலோசனைக் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் 22ஆம் தேதி திருச்சியில் கூட்டுவதாக அறிவித்தார் டிடிவி தினகரன்.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 18) வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 83ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள வ.உ.சி மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய டிடிவி, அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிச்சயம் போட்டியிடும். அதற்காக வரும் 22ஆம் தேதி, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். 24ஆம் தேதி, உள்ளாட்சித் தேர்தலிலே போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்ப மனு பெறப்படும்” எனக் கூறினார்.

மேலும், கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தைக் கொண்டாடும் விழாவில் பேசிய ரஜினிகாந்த், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி, தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆவேன் எனக் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார். முதலமைச்சரான பிறகு அவரது ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்று தமிழகத்தில் சொல்லாதவர்களே கிடையாது. அதிசயமும் அற்புதமும் நிகழ்ந்தது. ஆட்சி கலையவில்லை...” எனப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த தினகரன், “எடப்பாடி , தான் எப்படி வந்தோம் என்பதை மறந்து விட்டார். இப்போது நடந்துகொண்டிருக்கிற எடப்பாடி, ஓபிஎஸ் நடத்தும் மன்னார் அண்டு கம்பெனியின் ஆட்டமெல்லாம் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் நிறைவு பெற்று விடும்” எனக் கூறினார்.

மேலும் தினகரன் பேசும் போது, “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஒரே சின்னம் தருமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம். ஒரே சின்னம் கிடைக்கும் வரை தோ்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்த காரணத்தினால் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தல்களில் போட்டியிடவில்லை.

செல்லும் இடமெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமெனக் கழக நிர்வாகிகள் கோரி வருகின்றனர். அதனால் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் ஒரே சின்னம் கிடைக்காவிட்டாலும் அமமுக போட்டியிடும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து நிலைகளிலும் அமமுக போட்டியிடும்.

இடைத் தேர்தல் வெற்றியை வைத்துக்கொண்டு ஆட்சியாளர்கள் அகம்பாவத்துடன் பேசி வருவது மேலிடம் கைவிடும் வரைதான். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதும் துரோகிகளைத் தோற்கடிப்பதும்தான் எங்களுடைய தலையாய பணி” எனக் கூறினார் டிடிவி தினகரன்.

திங்கள், 18 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon