மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

விபத்தா? கொலையா? சினிமாவை மிஞ்சும் க்ரைம்!

விபத்தா?  கொலையா? சினிமாவை மிஞ்சும் க்ரைம்!

கிருஷ்ணகிரி அருகே காரில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, அதை விபத்தாக சித்திரிக்க முயன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சனமாவு பகுதியில் கடந்த 12ஆம் தேதி கார் மீது லாரி ஒன்று மோதியதில், கார் எரிந்து சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் முரளி பலியானார். காரில் பயணித்த நீலம்மா என்ற பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தைப் பார்த்தவர்கள் விபத்தில் கார் எரிந்துவிட்டதாகக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த உத்தனப்பள்ளி காவல் துறையினர், பலியான கார் ஓட்டுநரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை ஆய்வுசெய்தபோது, நடந்தது விபத்தா அல்லது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலையா என்று யூகிக்க முடியாமல் குழம்பினர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சேலம் சரக டிஐஜி பிரதீப் குமார், கிருஷ்ணகிரி எஸ்பி பண்டித் கங்காதர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர். அப்போது, “நடந்தது விபத்து போல தெரியவில்லை. கொலையாக இருக்கலாம். அந்தக் கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்துங்கள்” என்று டிஐஜி உத்தரவிட்டார்.

அதன்படி, டிஎஸ்பி தலைமையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. செல்போன் டவர் லொக்கேஷன், காருக்கு முன்னாலும் பின்னாலும் வந்த வாகனங்கள், காரில் மோதிய லாரி குறித்தும் போலீசார் விசாரித்தனர். காவல் துறை நம்பியது போலவே பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் ‘விபத்துக்கான அடையாளங்கள் தெரியவில்லை, பெட்ரோல் வாசனையும் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கணவர் ஆனந்தபாபுவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதான் குற்றவாளிகளை நெருங்க காவல் துறைக்கு உதவியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் நடத்திய டிஐஜி பிரதீப் குமார், “கொலைக்குக் காரணமான முக்கிய குற்றவாளியை பிக்ஸ் செய்துவிட்டோம். குற்றவாளிகளை டாப் டு பாட்டம் வரையில் கண்டுபிடித்தாக வேண்டும். தற்போது போலீஸ் கண்காணிப்பில் இருப்பவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறி தெம்பாகப் புறப்பட்டுச் சென்றார்.

நடந்தது விபத்தா, திட்டமிட்ட கொலையா என்பதை அறிய நாமும் புலனாய்வில் இறங்கினோம்

ஓசூர், மகாலட்சுமி நகரில் வசித்துவருபவர் ஆனந்தபாபு. அவரது மனைவி நீலம்மா. இருவரும் உத்தனப்பள்ளி அருக்கில் நாயக்கனப்பள்ளியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். ஆனந்தபாபுவுக்கும் அவரது மனைவி நீலம்மாவின் உறவினர் ஒருவருக்கும் தொழில்போட்டி காரணமாக நீண்ட நாட்களாக மோதல் இருப்பதும், இதுதொடர்பாக பலமுறை சமரசம் பேசப்பட்டுள்ளதையும் ஆனந்தபாபு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நடந்த விசாரணையில் தொழில்போட்டி காரணமாக ஆனந்தபாபு குடும்பத்தினரைக் கொல்ல உறவுக்காரரே மதுரையிலிருந்து கூலிப்படையினரை இறக்கியது தெரியவந்தது.

கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் நிதானமாக திட்டமிட்டு கனகச்சிதமாக இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் கூலிப்படையினர்.

கணவனும் மனைவியும் நிறுவனத்துக்குச் சென்றாலும், அங்கிருந்து வீட்டுக்குச் சென்றாலும் பெரும்பாலும் ஒன்றாகத்தான் செல்வர். அப்படித்தான் சம்பவம் நடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று இரவு சுமார் 7.00 மணியளவில் வீட்டுக்குப் புறப்படத் தயாராக இருந்தனர். கம்பெனியில் வேலை கொஞ்சம் இருந்ததால், மனைவி நீலம்மாவை மட்டும் ஓட்டுநருடன் காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் ஆனந்தபாபு.

இருவரும் வீட்டுக்குப் புறப்படும்போது தகவல் சொல்வதற்காக நாயக்கனப்பள்ளியில் உள்ள அட்டைப்பெட்டி கம்பெனியின் அருகில் கூலிப்படையினர் ஒருவனை நிறுத்தியுள்ளனர். அவனும் கார் புறப்பட்டதும் கூலிப்படையினருக்குத் தகவல் அளித்துள்ளான். வழியில் கூலிப்படையினர் ஒரு கார், ஒரு டிப்பர் லாரியுடன் தயார் நிலையில் காத்திருக்கிறார்கள். நீலம்மாவின் காரை பின் தொடர்ந்து வந்த ஒருவன், கார் வரும் இடத்தைப் பற்றி கூலிப்படையினருக்குத் தகவல் அளித்து வந்துள்ளான்.

சனமாவு என்ற இடத்தில் கூலிப்படையினர் ஏற்பாடு செய்துவைத்திருந்த டிப்பர் லாரி, தான் சென்ற திசையிலிருந்து காரணமே இல்லாமல் வலதுபுறம் ஏறிவந்து கார் மீது மோதுகிறது. உடனே லாரியிலிருந்து நான்கு பேர் இறங்கி வருகிறார்கள். லாரிக்குப் பின்னால் வந்த காரில் இருந்து மூன்று பேர் இறங்குகிறார்கள். ஏழு பேரும் ஒன்றுசேர்ந்து கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, மின்னல் வேகத்தில் காரில் தப்பித்து விடுகிறார்கள்.

கார் தீப்பிடித்து எரிவதைப் பார்த்தவர்கள் தீயணைப்புத் துறைக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கின்றனர். காரில் இருந்தவர்களைக் காப்பாற்றவும் முயற்சி செய்கின்றனர். ஆனால் கார் ஓட்டுநர் முரளி சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறார். எரிந்த நிலையில் உயிர் தப்பிய நீலம்மாவை பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நீலம்மாவுக்கு 80 சதவிகிதத் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

முக்கிய குற்றவாளியைத் தங்களது கண்காணிப்பில் வைத்துள்ள கிருஷ்ணகிரி காவல் துறையினர், கூலிப்படையினரை தேடிவருகிறார்கள். சில நாட்களில் கொலைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவோம் என்கிறார்கள்.

இது தொடர்பாக நாம் டிஐஜியை தொடர்பு கொண்டு பேசியபோது, “விசாரணையின்போது எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் சிறப்பாகச் செயல்பட்டது பாராட்டுக்குரியது. விசாரணை நடந்து வருவதால் இதுகுறித்து மேலும் தகவல்களை பகிர்ந்துகொள்ள இயலாது” என்று தெரிவித்தார்.

“தமிழகத்தில் விதவிதமான கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மக்களைப் பீதியடைய வைக்கிறது. இதுபோன்ற கொலைக்குக் கூலி கொடுப்பவர்களையும், கூலிப்படையினரையும் மக்கள் மன்றத்தில் நிற்கவைத்து தண்டனை கொடுக்க வேண்டும்” என்கிறார்கள் பெண்கள் அமைப்பினர்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon