மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

இரண்டு நாயகி, மூன்று வேடங்கள்: கலக்கும் சந்தானம்

இரண்டு நாயகி, மூன்று வேடங்கள்: கலக்கும் சந்தானம்

மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமான ‘டிக்கிலோனா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நகைச்சுவை நடிகனாக இருந்து நாயகனாக மாறியவர்களில் சந்தானத்துக்கு எப்போதும் தனியிடம் உண்டு. காமெடியில் கொடிகட்டிப் பறந்த சந்தானம், ஹீரோவாக தன்னை நிரூபிக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கப் போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ 1 எனத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சந்தானம். சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டு 2, ஏ 1 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து, தற்போது இவர் தேர்ந்தெடுத்திருக்கும் படம் டிக்கிலோனா. வழக்கமாக நாயகர்களே ‘டபுள் ரோல்’ என்றால் யோசிக்கும் காலத்தில், சந்தானம் தைரியமாக இந்தப் படத்தில் மூன்று ரோல்களில் நடிக்கவுள்ளார். அதுவும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில். இந்தப் படத்தில் ஹீரோ, வில்லன், நகைச்சுவை நடிகர் என மூன்று பாத்திரங்களில் வரும் சந்தானத்துக்கு இரண்டு நாயகிகள். அனகா மற்றும் ஷிரின் காஞ்சன்வாலா ஆகிய இருவரும் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

அனகா ‘நட்பே துணை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். ஷிரின் ‘நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என ஒரு காமெடி பட்டாளமே இந்தப் படத்தின் கூட்டணியில் இணைந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் தலைப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சந்தானத்தின் ‘இன்ஸ்பிரேஷனான’ கவுண்டமணி காமெடியில் வரும் ‘டிக்கிலோனா’(ஜென்டில்மேன்) என்ற வார்த்தையையே இந்தப் படத்தின் தலைப்பாக மாற்றியுள்ளார் சந்தானம்.

கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் ஃபேக்டரி சார்பில் சினிஸும் தயாரிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று (நவம்பர் 18) பூஜையுடன் தொடங்கியது. அடுத்த வருடம், ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon