மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்?

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்?வெற்றிநடை போடும் தமிழகம்

மேயர், நகராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான தேர்தலில் மாற்றம் கொண்டுவர தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (நவம்பர் 19) காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும், மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்துவதா அல்லது மறைமுக தேர்தல் நடத்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.

1996, 2001 ஆம் ஆண்டுகளில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் மன்றத் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்தனர். 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை நடத்தியது. அதாவது, உறுப்பினர்களில் ஒருவரை அந்தந்த மாமன்ற உறுப்பினர்களே மேயராகத் தேர்ந்தெடுத்தனர்.

அதன்பிறகு 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதில் மாற்றம் கொண்டுவந்தது. மேயர் உள்ளிட்ட பதவிகளை மக்களே வாக்களித்து தேர்வு செய்யும் நேரடி தேர்தல் முறையை ஜெயலலிதா கொண்டுவந்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைத்தாலும் எதிர்பார்த்த வெற்றி அக்கட்சிக்கு கிடைக்காததால், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படலாம் என ஜெயலலிதா கருதினார். இதனால் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள் அந்தந்த மாமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டம் 2016, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 2016ல் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா காலமானார். அதன்பிறகு இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

இதற்கிடையே மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மீண்டும் நேரடி தேர்தல் நடத்துவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது நிறைவேற்றியது. தற்போது, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது நிலைப்பாட்டிலிருந்து மாறி கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தலை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை தங்களுக்கு கணிசமான எண்ணிக்கையில் மேயர் இடங்கள் வேண்டும் என அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டுதான் மறைமுகத் தேர்தல் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

செவ்வாய், 19 நவ 2019

அடுத்ததுchevronRight icon