சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிக்கொண்டு தந்தையுடன் சென்ற 12 வயது சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லும் என்றும் தெரிவித்தது. தற்போது கார்த்திகை மாத மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில், விரதங்களைக் கடைப் பிடித்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்குச் சென்று வருகின்றனர்.
இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயிலுக்குச் செல்வதற்காகப் பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டமிட்டுள்ளார். இதுவரை 300க்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை. ஆந்திராவிலிருந்து சென்ற 10 பெண்களை போலீசார் திருப்பி அனுப்பியதாகச் சொல்லப்பட்டது. சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கமாட்டார்கள் என்று தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியிலிருந்து இருமுடிகட்டிக் கொண்டு தனது தந்தையுடன் சபரிமலைக்குச் சென்ற 12 வயது சிறுமியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். சபரிமலை செல்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விர்ட்சுவல் கியூவ் புக்கிங்கில் சிறுமிக்கு 10 வயது என்றிருந்த நிலையில் பம்பை சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் அந்த சிறுமிக்கு 12 வயது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, அடையாள அட்டை ஆகியவற்றை பெற்று ஆய்வு செய்ததில் சிறுமிக்கு 12 வயது என்பது தெரியவந்துள்ளது. இதனால் இருமுடிகட்டி வந்த அந்த சிறுமியை மலையேற போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சபரிமலையில் தற்போது நிலவும் சூழ்நிலையை அந்த சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களிடம் எடுத்து கூறிய போலீசார் அவர்களை மட்டும் அனுப்பி வைத்தனர். தற்போது அந்த சிறுமி போலீசாரின் பாதுகாப்பில் பம்பை அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
திங்கள் அன்று, 9 வயது கேரள சிறுமி, கோயிலின் பாரம்பரியத்தை ஆதரித்து தனது கழுத்தில் பதாகை ஒன்றைத் தொங்கவிட்டுள்ளார், அதில் அடுத்தமுறை ஐயப்பன் கோயிலுக்கு வர 50 வயது வரை காத்திருக்கத் தயார் என்று எழுதப்பட்டிருந்தது.
திருச்சூரைச் சேர்ந்த ஹிருதியா கிருஷ்ணன் என்ற அந்த சிறுமி, இதுவரை மூன்று முறை கோயிலுக்கு வந்துள்ளேன். இனி 50 வயதைக் கடந்த பிறகுதான் ஐயப்பனைத் தரிசிக்க வருவேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.